Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    
    rmsfisherman

    தடைசெய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வலைகளைப் பயன்படுத்தியதாக 41 விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, விசைப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டைமடி, சுருக்கு மடி வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வலைகளை வைத்து சில மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், இதனால் மீன்வளம் குறைந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி கடந்த மூன்று மாதங்களாக நாட்டுப் படகு மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    பிப்.20 முதல் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் வந்தனர். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களின் மீன்பிடி வலைகளையும், படகு உரிமச் சான்றிதழ்களான ஆர்.சி.புக், இன்சூரன்ஸ், மானிய டீசல் பதிவு புத்தகம் ஆகியவற்றை சங்கத் தலைவர் அருள் தலைமையில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து கோஷங்கள் எழுப்பினர். மீன்வளத் துறை உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், மீனவர்கள் கலைந்து சென்றனர்.

    மேலும், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நலச் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் ஜெயபிரகாஷ், முருகானந்தம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடமும் மனு அளித்துள்ளனர்.

    அனுமதி மறுப்பு: இந்த நிலையில், இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்தாக மீன்வளத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை 41 விசைப்படகுகள் மீது வழக்குப் பதிந்தனர். இந்தப் படகுகளுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அதிகாரிகளைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை துறைமுகப் பகுதியிலுள்ள மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 41 படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கக் கோரினர்.

    ஆனால், அதிகாரிகள் மறுத்ததையடுத்து, பிற மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளும் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    இரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருவதால், திங்கள்கிழமை எந்தப் படகும் கடலுக்குச் செல்லவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai