சுடச்சுட

    

    ஒசூர் அருகே யானை தூக்கி வீசியதில் முதியவர் பலத்த காயம்

    By dn  |   Published on : 05th March 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hosptalised

    ஒசூர் அருகே செவ்வாய்க்கிழமை முதியவரை யானை தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே போடூர்பள்ளம் காட்டில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. வனத் துறையினர் தீவிரமாகப் போராடி, தேன்கனிக்கோட்டை வனப் பகுதி வழியாக 50 யானைகளையும் கர்நாடகத்துக்கு விரட்டினர்.

    இந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் இருந்த 15 யானைகள் தனியாகப் பிரிந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு போடூர்பள்ளம் காட்டுக்கு திரும்பின.

    இந்த யானைகள் தொடர்ந்து போடூர்பள்ளம், பீர்ஜேப்பள்ளி, சானமாவு, ஆழியாளம், பாத்தகோட்டா ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்து விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்தும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போடூர்பள்ளம் அருகே ஆழியாளம் பகுதியைச் சேர்ந்த முளுபாகலப்பா (65) டீ குடிப்பதற்காக அங்குள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென யானைக் கூட்டம் அந்தச் சாலையைக் கடந்தது. இதை சற்றும் எதிர்பாராத முளுபாகலப்பா, யானைகளைப் பார்த்து தப்பி ஓடினார். அப்போது ஒரு யானை, அவரை விரட்டிச் சென்று தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடுப்பு எலும்பு, கால்கள் உடைந்தன.

    உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல, தேன்கனிக்கோட்டை அருகே பாலதோட்டனப்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம்மாவையும் (55) திங்கள்கிழமை யானை தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    யானைகளை காட்டுக்குள் உடனடியாக வனத் துறையினர் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai