சுடச்சுட

  

  கிராமங்களில் கலாசார நடன நிகழ்ச்சி: அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

  By dn  |   Published on : 05th March 2014 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோயில் திருவிழாக்களில் கலாசார நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  இது தொடர்பாக, நாமக்கல், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களின் விவரம்: எங்களது ஊரில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும்.

  அப்போது பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கலாசார, கிராமிய நடனங்கள் போன்றவை அதில் இடம்பெறும். இந்த கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால், எங்களது மனு குறித்து போலீஸ் அதிகாரிகள் இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே, எங்களது கோயில் திருவிழாக்களில் கலாசார நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுக்களில் கோரப்பட்டது.

  இந்த மனு நீதிபதி வி.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், இது போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதில், குறிப்பாக ஆபாச நடனங்கள் இருக்கக் கூடாது; இரட்டை அர்த்த வசனங்கள் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

  அந்த வழக்குகளை கவனமாக பார்த்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.

  ஆனால், அதன் பிறகு அந்த கோயில் நிர்வாகத்தினர் நிகழ்ச்சியின்போது விதிகளை மீறினார்களா என்பது குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

  ஆனால் இது போன்ற மற்றொரு வழக்கில், தனி நபர்கள், ஆபாச நடனம் நடத்துவதற்காக பிரார்த்தனை செய்யக் கூடிய பொது இடத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும், கோயில் நிர்வாகத்தினர் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரவில்லை. கோயிலுக்குத் தொடர்பு இல்லாதவர்கள் வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி கோருகின்றனர். அந்த நிகழ்ச்சிகளில் பெண்களை ஆபாசமாக சித்திரித்து நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

  பெண்கள் ஆபாச தடைச் சட்டத்தில் இவை போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. துண்டு பிரசுரங்கள், புத்தகங்களில் பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதற்கு அந்தச் சட்டம் தடை செய்கிறது.

  விளம்பரங்களில் கூட அது போன்று பெண்களை சித்திரிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இது போன்று தவறுகள் நடக்கும் எனத் தெரிந்தும் அனுமதி வழங்க முடியாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

  இதே போன்ற மற்றொரு வழக்கில், நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி ஹோட்டல் பிரீமியம் ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

  மனுவை விசாரித்த நீதிபதி, சென்னையில் உள்ள எந்த ஒரு ஹோட்டலிலும் நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. அதனால், அனுமதி வழங்கக் கோரிய இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai