சுடச்சுட

    

    கோவையில் வாகன உதிரிபாக தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் சாவு

    By dn  |   Published on : 05th March 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த வெடி விபத்தில், ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டம், கணபதி, ஜெயப்பிரகாஷ் நகரில் ஜி.எம்.சுப்பையன் என்பவருக்குச் சொந்தமான "பிரஷர் டயாகாஸ்டிங் கம்பெனி' (அழுத்தம் மூலமாக அச்சு வார்க்கும் தொழிற்சாலை) செயல்பட்டு வருகிறது. இங்கு, நைட்ரஜன் வாயு அழுத்தம் மூலமாக அலுமினிய இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

    அந்த தொழிற்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உற்பத்தி நடைபெறுவது வழக்கம். பகலில் நான்கு பேரும், இரவில் இருவரும் பணியில் இருப்பர். செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கணபதி, காமராஜ் நகரைச் சேர்ந்த பொறியாளர் ராம்குமார், ஜெயபால், அருண்குமார் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த சந்திரசாமி (42) ஆகியோர் உற்பத்திப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில், மாலை 4 மணியளவில் தொழிற்சாலையில் பெரிய வெடிச்சத்தம் கேட்டுள்ளது. தொழிற்சாலை மேற்கூரைகள் அருகிலிருந்த பகுதிகளில் சிதறி விழுந்துள்ளன. சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்க்கையில், தொழிற்சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

    தொழிலாளர் சந்திரசாமி, வேலை செய்த இடத்திலிருந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு, வயிறு வெடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தனர்.

    சம்பவ இடத்துக்குச் சென்ற கணபதி தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிருக்குப் போராடிய மூவரும் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த சந்திரசாமியின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் பிரவேஷ்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். சரவணம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், உயர் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர் சுப்பையன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்தனவா என்றும் விசாரிக்கப்படுகிறது.

    விபத்தில் உயிரிழந்த சந்திரசாமிக்கு மனைவி செல்வி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம்தான் சந்திரசாமி இங்கு பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai