சுடச்சுட

    
    bus

    சேலம் மாவட்டம், குப்பனூர் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து, மரத்தில் மோதிய விபத்தில் இரு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர்.

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் இருந்து சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் செல்வதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குப் புறப்பட்டது.

    அந்தப் பேருந்தில் நடத்துநராக சேலத்தைச் சேர்ந்த அ.ஷாஜஹான் (48) என்பவரும், ஓட்டுநராக ராசிபுரத்தைச் சேர்ந்த எம்.குணசேகரன் (46) என்பவரும் பணியாற்றினர். பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்தப் பேருந்து சேலம் மாவட்டம், குப்பனூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரிப் பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த கடத்தூரைச் சேர்ந்த செ.சாம்ராஜ் (22), குறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ர.விஜயலட்சுமி (36), பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த செ.மயில் (55) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், நடத்துநர் ஷாஜஹான், அரூர் சந்தப்பட்டியைச் சேர்ந்த பொ.ராதா (45), ரா.சபாபதி (18), பொம்மிடி ப.அங்கமுத்து (72), ஆத்தூர் சு.சரண்யா (25), சேலம் சு.கார்த்திகேயன் (1) உள்ளிட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து ஓட்டுநர் குணசேகரன் கூறியது:

    குப்பனூர் பகுதியில் வந்தபோது எனக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு நடைபெற்றது நினைவில் இல்லை என்றார் அவர்.

    இந்த விபத்து தொடர்பாக வீராணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் - அரூர் சாலையில் கடந்த சில மாதங்களாக அதிகளவில் விபத்துகள் நிகழ்வது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விபத்து தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai