சுடச்சுட

  

  தக்கலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவர் கைது

  By dn  |   Published on : 05th March 2014 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vasanth_kumar

  கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவர் உள்பட அக்கட்சியினர் 465 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  திருவட்டாறு அருகே ஆற்றூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும், அக்கூட்டத்துக்கு அனுமதி வழங்ககூடாது எனவும் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தெரிவித்திருந்தாராம். ஆனால், கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

  இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் கும்பலாகச் சென்று நாம் தமிழர் கட்சியினர் அமைத்திருந்த பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான் ஜேக்கப் உள்ளிட்ட 20 பேர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

  இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்; தடை செய்யப்பட்ட இயக்கங்களின் படங்களை கூட்டங்களில் அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தக்கலையிலுள்ள கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை.

  இருப்பினும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர்.

  இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தக்கலை காவல் நிலையத்தில் முகாமிட்டார். அவருடைய உத்தரவின்படி புலியூர்குறிச்சி, தக்கலை பழைய பேருந்து நிலையம், தக்கலை காமராஜர் பேருந்துநிலையம் மேட்டுக்கடை சந்திப்பு, அழகியமண்டபம் உள்ளிட்ட பல்வேறு சந்திப்புகளில் அதிவிரைவுப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தக்கலை நோக்கி வாகனங்களில் வந்த காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

  எம்.எல்.ஏ.க்கள் கைது: இதையும் மீறி வந்த எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் (குளச்சல்), ஜான் ஜேக்கப் (கிள்ளியூர்), விஜயதரணி (விளவங்கோடு), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் குமாரதாஸ், ராணி வெங்கடேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன், நிர்வாகிகள் ராஜேஷ்குமார், டி.ஆர்.செல்வம், முகம்மதுராபி, சதா மற்றும் கட்சியினரை போலீஸார் வழிமறித்து கைது செய்வதாகக் கூறினர். இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கும் போலீஸாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அனைவரையும் போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

  அதுபோல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நாகர்கோவிலில் இருந்து காரில் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமாரையும், அவருடன் வந்தவர்களையும் புலியூர்குறிச்சியில் வைத்து வழிமறித்து போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் கைது நடவடிக்கை காலை 9.45 முதல் பகல் 12 மணி வரை நீடித்தது.

  காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் வசந்தகுமார் கூறுகையில், ஜனநாயக நாட்டில் ஒரு தனி மனிதனோ, இயக்கங்களோ தவறு செய்யும்போது அதை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லும் கருத்துரிமை அனைவருக்கும் உண்டு. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்தது தவறு எனக் கூறினோம். அறவழியில் போராடி வரும் எங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குகூட அனுமதி வழங்காமல் கைது செய்வது சரியல்ல என்றார்.

  "எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் தழுவிய பந்த் நடத்தப்படும்' என பிரின்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

  இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai