Enable Javscript for better performance
திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு: புதிய தமிழகத்துக்கு- தென்காசி, மமகவுக்கு- மயிலாடுதுறை- Dinamani

சுடச்சுட

    

    திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு: புதிய தமிழகத்துக்கு- தென்காசி, மமகவுக்கு- மயிலாடுதுறை

    By dn  |   Published on : 05th March 2014 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk_alliance

    திமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு தென்காசி தொகுதியும் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, மமக கட்சியின் தலைவர் ரிபாயி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) கையெழுத்திட்டனர்.

    திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம், வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரைக் கொண்ட திமுக குழுவினருடன் கூட்டணிக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியை மட்டும் ஒதுக்குமாறு அவர் கேட்டிருந்தார். அதற்கு திமுக குழுவினர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் சம்மதித்தனர்.

    இதனையடுத்து கருணாநிதியும் கிருஷ்ணசாமியும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியது:

    மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம் என்பதை ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். புதிய தமிழகம் தென்காசி தொகுதியில் போட்டியிட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கேட்ட தொகுதியைக் கொடுத்துள்ளனர். மகிழ்ச்சி. திமுக கூட்டணியில் மமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

    மமகவுக்கு - மயிலாடுதுறை: மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர்கள் ரிபாயி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மமக கட்சியினர் 2 தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டிருந்தனர். அதற்கு திமுக குழுவினர் சம்மதிக்கவில்லை. எனினும் மமக கட்சியினர் ஒரு தொகுதியை ஏற்றுக்கொண்டனர். மயிலாடுதுறை தொகுதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனையேற்று கருணாநிதியும் ரியாவும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

    பின்னர் ரிபாயி செய்தியாளர்களிடம் கூறியது:

    திமுகவுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது. 2 தொகுதிகள் கேட்டோம். மயிலாடுதுறை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டோம். முஸ்லிம் மக்கள் அனைவரும் திமுகவுக்கே ஆதரவு தெரிவிப்பர். முஸ்லிம் சமுதாயத்துக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு தருவோம் என்று கடந்த முறையும் கூறினர். ஆனால் பிறப்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. தேர்தல் வருகிறது என்றதும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும். அதனால் திமுக கூட்டணியையே முஸ்லிம் அனைவரும் ஆதரிப்பார்கள் என்றார் அவர்.

    முஸ்லிம் லீக் - திருநெல்வேலி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அக்கட்சித் தலைவர் காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் அபுபக்கர், பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் காதர் மொகிதீன் கூறியது:

    திமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறோம். எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டோம்.

    ஆனால் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும், ஏற்றுக் கொண்டுள்ளோம்.

    வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, நெல்லை, திருச்சி ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். கடந்த முறை நாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை எங்கள் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றார் அவர்.

    முஸ்லிம் லீக் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று முஸ்லிம் லீக் கோரி வருகிறது. ஆனால் திமுக அதன் முடிவில் உறுதியாக இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே புதன்கிழமை உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    35 இடங்களில் திமுக: புதிய தமிழகம், மமக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 1 இடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. மீதமுள்ள 35 தொகுதிகளில் திமுக போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் அந்தக் கட்சிக்கு 9 முதல் 10 இடங்கள் ஒதுக்கி, மீதம் 25 இடங்களில் திமுக போட்டியிடத் திட்டமிட்டு வருகிறது.

     

    விடுதலைச் சிறுத்தைகளுக்கு சிக்கல்

    மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் திமுக ஒரு தொகுதியை மட்டுமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

    இதனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது:

    மக்களவைத் தேர்தலில் 3 தனி தொகுதிகளும், 2 பொது தொகுதிகளும் ஒதுக்கும்படி திமுகவிடம் கேட்டிருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நாளை (புதன்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதன் பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.

    சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், தருமபுரி, பெரம்பலூர், தேனி ஆகிய தொகுதிகளின் பட்டியலை திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்துள்ளனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தமிழகம் முழுவதும் செல்வாக்கு இல்லை என்று திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இதனை மறுத்து திருமாவளவன் வாதிட்டுள்ளார். தலித் சமுதாயம் மட்டுமல்லாமல் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் எங்கள் கட்சியில் அதிகம் உள்ளனர். அதனால் பொதுத் தொகுதிகளும் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    ஆனால், தற்போதைய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஓரிடமே ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தினால், கடந்த முறை 2 தொகுதிகள் ஒதுக்கியதுபோல இம்முறையும் 2 தொகுதிகளை ஒதுக்கும் எண்ணத்தில் திமுக தலைமை உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai