Enable Javscript for better performance
தேர்தல் கூட்டணி: மார்க்சிஸ்ட் மாநிலக் குழுவில் காரசார விவாதம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் கூட்டணி: மார்க்சிஸ்ட் மாநிலக் குழுவில் காரசார விவாதம்

    Published on : 05th March 2014 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    marxist

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

    தேசிய அளவில் காங்கிரஸ் பாஜக அல்லாத 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

    கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்த, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அதிமுக - மார்க்சிஸ்ட் கூட்டணியை அறிவித்தார்.

    அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி. பரதன் ஆகியோரும் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுகவுடன் இடதுசாரிக் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தினர். அதிமுக அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமக, மதிமுக இருந்த நிலையிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே இருப்பதால் கடந்த முறை ஒதுக்கப்பட்டதைவிட அதிக தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை ஏற்காத ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக குழுவினர், தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் எனக் கூறியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இடதுசாரிக் கட்சிகளின் நிர்வாகிகள் அதிர்ச்சியுடன் திரும்பினர். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சும் நடக்காத நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இது அதிர்ச்சியை அளித்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டதும் அந்தத் தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுக்கும் என ஜெயலலிதா அறிவித்ததால் இடதுசாரிகள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

    வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு என வேகம் காட்டிய முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள்கிழமை (மார்ச் 3) தனது தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கினார். இந்தக் கூட்டங்களில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஜெயலலிதாவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எதுவும் பேசவில்லை.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலக்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. வரதராஜன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, கே. பாலகிருஷ்ணன், அ. சௌந்திரராஜன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என 80-க்கும் அதிகமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய பலர், அதிமுகவின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து நம்மை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். அதுபோல இப்போதும் நடந்துள்ளது, கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி தவறாகப் பேசுவதற்கு வழிவகுத்துவிட்டது என்ற பலர் வருத்தப்பட்டுள்ளனர்.

    ஒன்றிரண்டு எம்.பி. தொகுதிகளுக்காக எதையும் தாங்கிக் கொண்டு எதற்கும் தயாராக இருந்தால் மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கம்யூனிஸ்டுகள் மீதான மதிப்பு குறைந்துவிடும்.

    எனவே, விரைவாக தொகுதிப் பங்கீட்டை முடிக்க வேண்டும். கடந்த முறை போட்டியிட்ட 3-க்கும் குறையாமல் வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தலைவர்கள் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

    தர்மசங்கடம் ஏதும் இல்லை

    அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், எல்லோருக்கும் பிரச்னை உள்ளது. அரசியலில் தர்மசங்கடம் என்று எதுவும் இல்லை என்றார்.

    அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தும் சந்தித்து பேசியபோது, வரும் மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்து அறிவித்தார்கள். அதன்படி அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது.

    எங்களுக்கு வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுள்ளோம். ஒரு தொகுதி, இரண்டு தொகுதி என ஊடகங்களில் வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai