சுடச்சுட

    
    jaya

    நாகை மாவட்டம், நாகை மற்றும் செம்பனார்கோவிலை அடுத்த காளஹஸ்தினாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வருகை தரும் முதல்வரை வரவேற்க அதிமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாகை (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபாலுக்கு வாக்குக் கோரி நாகை அவுரித் திடலிலும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகனுக்கு வாக்குக் கோரி செம்பனார்கோவில் அருகே உள்ள காளஹஸ்தினாபுரத்திலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாகைக்கு வருகை தரும் முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் சீரமைக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரசாரக் கூட்ட ஏற்பாடுகள் உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையிலும், செம்பனார்கோவில் பிரசாரக் கூட்ட ஏற்பாடுகள் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் தலைமையிலும் நடைபெற்று வருகிறது.

    நாகை ஆயுதப்படை மைதானத்திலிருந்து பப்ளிக் ஆபீஸ் சாலை வழியே பிரசாரக் கூட்ட இடமான அவுரித் திடலுக்கு காரில் செல்லும் முதல்வரை வரவேற்கும் விதமாக அதிமுக சார்பில் சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு, பிரமாண்ட அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    செம்பனார்கோவிலில், காளஹஸ்தினாபுரம் பிரசாரக் கூட்ட மேடையருகில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. பிரசாரக் கூட்ட இடத்தைச் சுற்றியும், செம்பனார்கோவிலிலிருந்து காளஹஸ்தினாபுரம் வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகள் மற்றும் வரவேற்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி எம். ராமசுப்பிரமணி மேற்பார்வையில், தஞ்சாவூர் சரக டிஐஜி சஞ்சய்குமார் தலைமையில், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்பட 7 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    செம்பனார்கோவிலில் 3 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், 9 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள் உள்பட 1,050 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நாகையில், ஆயுதப்படை மைதானம் முதல், அவுரித் திடல் வரை பப்ளிக் ஆபீஸ் சாலையின் இருபுறங்களிலும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நாகை அவுரித்திடல் மற்றும் நாகை ஆயுதப்படை மைதானம் ஆகிய பகுதிகளில் காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai