சுடச்சுட

    

    நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிட்ட காங்கிரஸ் அரசு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 05th March 2014 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_speech

    நாட்டின் பாதுகாப்பை மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பலவீனப்படுத்திவிட்டது என்று முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

    சென்னை அருகே மீனம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

    மத்திய அரசு கடைப்பிடித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயக் கொள்கை தவறான ஒன்று. இந்த தவறான கொள்கை, விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கிறது. பெரிய வர்த்தக நிறுவனங்கள், பெருந்தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான கடன் தொகையை வெளிநாட்டில் 3 சதவீத வட்டியில் பெற்றுக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. ஆனால், பாமர மக்களாகிய நீங்கள் வங்கிக் கடன் பெற வேண்டுமானால் 10 சதவீதத்துக்கும் மேல் வட்டி செலுத்த வேண்டும். விவசாயிகளுக்குக் கூட 7 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது.

    இறக்குமதியாகும் நிலக்கரி: உலகிலேயே நிலக்கரி படிமம் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இந்த நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமையை மத்திய அரசு, தனியாருக்குக் குறைந்த விலைக்கு தாரைவார்த்து விட்டது.

    இந்த ஊழலை மத்திய தணிக்கைத் துறையும், உச்ச நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளதால் நமக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நம்மிடம் போதிய நிலக்கரி இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இரும்புத் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இரும்புத்தாதுகூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. இதன் காரணமாக, நாட்டில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

    முப்படைகளை அலட்சியம்: பாதுகாப்புத் துறையையே பாதுகாப்பற்றதாக ஆக்கிவிட்டது மத்திய அரசு. கடந்த ஆண்டு கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தீ விபத்துக்கு உள்ளானது. அதில், 18 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

    புதிதாக நீர் மூழ்கி கப்பல்கள் வாங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கடற்படையிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. இதுவே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம். முப்படைகளும் நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று ஒவ்வொரு தளபதியும் கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு பிரதமருக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால், இதற்கு பதில் அனுப்பக் கூட பிரதமருக்கு நேரமில்லை. இதன் விளைவு, முப்படைகளிடம் போதிய விமானங்களோ, நவீன ஆயுதங்களோ இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும், படைகளுக்குத் தேவையான ஆள் பலமும் இல்லை. நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளையே மத்திய காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தியுள்ளது என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai