சுடச்சுட

  

  மீனவர்கள் பிரச்னை தீர மத்தியில் வலுவான அரசு: முதல்வர் பேச்சு

  By dn  |   Published on : 05th March 2014 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayalalitha

  தமிழக மீனவர்கள் பிரச்னை தீரவேண்டுமானால் மத்தியில் வலுவான அரசு தேவை என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வலியுறுத்தினார்.

  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த பத்தாண்டுகளாக நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

  சென்னை அருகே மீனம்பாக்கத்தில் தனது இரண்டாவது நாள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்துப் பேசினார், முதல்வர் ஜெயலலிதா. அவர் பேசியது:

  காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்னென்ன பிரச்னைகளுக்கு நீங்கள் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை சொல்லி மாளாது. பணவீக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை என மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  இப்படி எல்லா விதத்திலும் சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் சில மாதங்களுக்கு முன்புவரை அங்கம் வகித்து ஒட்டி உறவாடிய கட்சி திமுக. தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழலை முன்னின்று நடத்தியது அந்தக் கட்சி. இப்படி காங்கிரஸூம், திமுகவும் சேர்ந்து சாமானிய மக்களுக்கு எதிராகச் செயல்பட்டன. இதனால், நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து விட்டது.

  இப்படிப்பட்ட அரசிடம் இருந்து இந்திய நாட்டை காப்பாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. தமிழகத்துக்குத் தேவையானவற்றை மத்திய அரசிடம் இருந்து பெறக் கூடிய காலம் கனிந்து விட்டது.

  தமிழக மீனவர் பிரச்னை: இன்றைய சூழ்நிலையில், மிக முக்கிய பிரச்னையாக விளங்குவது தமிழக மீனவர்கள் பிரச்னை. இலங்கை கடற்படையின் தொடர் துன்புறுத்தல், சிறைபிடிப்பு காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதிமுக அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக தமிழக மீனவர்களை ஒருபுறம் இலங்கை அரசு விடுவித்து வருகிறது.

  மறுபுறம் புதிதாக மீனவர்களை சிறை பிடிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், வலுவான இந்திய அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்த மாற்றத்தைக் மத்தியில் கொண்டு வர எனது கரங்களை நீங்கள் பலப்படுத்த வேண்டும்.

  மாறுதலுக்கான தேர்தல்: விவசாய உற்பத்திக்கு முக்கியமாக தேவைப்படுவது உரம். இந்த உரத்தைக் கூட வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு மத்திய அரசு தேவைதானா என்பதை ஒரு நிமிஷம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் வெளிநாட்டு நிதிகளில் அதிகளவு மோரீஷஸ் போன்ற வருமான வரி குறைவாக உள்ள நாடுகளின் வழியாக வருகிறது. இதற்குக் காரணம் இந்த முதலீடுகளின் மூலம் பெறும் லாபத்துக்கான வரியை வெளிநாட்டில் செலுத்தினால் போதும். அங்கு வரி மிகக் குறைவு. இத்தகைய முதலீடுகளால் இந்திய நாட்டுக்கு எந்தவித வருவாயும் கிடைப்பதில்லை. மாறாகக் கெடுதல் தான் வந்து சேருகிறது.

  இதுபோன்ற முதலீடுகள் வெளியேறும் போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. வரி தவிர்ப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு 2015- ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் அச்சுறுத்தல்தான். இத்தகைய ஒரு மத்திய அரசு தேவைதானா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக்கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. அதன் சுமை ஏழை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சுமையில் இருந்து விடுபட தேவை மாறுதல். அதற்கு வழி வகுக்க இருப்பது வருகின்ற மக்களவைத் தேர்தல் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

  இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai