Enable Javscript for better performance
அதிமுக கூட்டணி: கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முக்கிய முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக கூட்டணி: கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முக்கிய முடிவு

    By dn  |   Published on : 06th March 2014 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    g_ramakrishnan

    தேர்தல் கூட்டணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 6) நடைபெறவுள்ளது.

    கடந்த 2009 மக்களவைத் தேர்தல், 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்து அதே அணியில் நீடிப்பதாக அறிவித்தன.

    கடந்த பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை தனித்தனியாக சந்தித்த மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி அதிமுகவுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தின. அப்போது, மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவளித்ததால் இப்போது தலா ஒரு தொகுதி மட்டுமே

    தர முடியும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால்அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் அதன்பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.

    இந்நிலையில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் மார்ச் 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும், அதிமுகவின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருப்பது தேசிய கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளனர்.

    2-வது நாளாக புதன்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் அதிமுகவுடன் நடந்ததொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை குறித்து நீண்ட நேரம்

    விவாதிக்கப்பட்டது. இதில் தங்கள் தரப்பில் 3 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.

    கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், "அதிமுகவுடன் இதுவரை நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநிலக் குழுவில் விவாதித்தோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

     

    இன்று இந்திய கம்யூனிஸ்ட் செயற்குழு

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநில அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

    தேர்தல் கூட்டணி தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai