Enable Javscript for better performance
இணையதள ஊடக பிரசாரத்துக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    இணையதள ஊடக பிரசாரத்துக்கு அனுமதி பெற வேண்டும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

    By dn  |   Published on : 06th March 2014 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election_commission

    பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற இணையதள சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

    நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    தமிழகம் முழுவதும் மார்ச் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிóலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். இங்கு தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அனைவரும் சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் விடுபட்டவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்கள் பெயரை இணைத்துக் கொள்ளலாம்.

    பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு: தேர்தலில் அதிகமாக பணம் செலவழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்படும். இதற்காக கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.

    பெரும் தொகை எடுத்துச் செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓட்டுப்போட பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    விளம்பரங்களை அகற்ற கெடு:

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதால் புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகளை அரசு வெளியிடக் கூடாது.

    அரசாங்கம் தொடர்பான எந்த பொருளிலும், இடத்திலும் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது. ஊரகப் பகுதிகளில் தனியார் இடங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்து கொள்ளலாம். இதுவரை வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை 2 நாள்களில் அகற்றாவிட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும்.

    பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தனிப்பட்ட நபர்கள் பிரசாரம் செய்தால் அது வேட்பாளரின் கணக்கில் வராது. ஆனால்,சமூக ஊடகங்களில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வேண்டுமானால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான செலவு வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

    கடற்கரைச் சாலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் உள்ள இரட்டை இலை வடிவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, டிஜிபி ராமானுஜம் அப்பதவியில் உள்ளது தொடர்பான பிரச்னை உள்ளிட்டவை குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றார் பிரவீண்குமார்.

    அம்மா உணவகங்கள்: விலக்கும் நிபந்தனையும்

    சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள இதர மாநகராட்சிகளில் செயல்படும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று பிரவீண்குமார் தெரிவித்தார்.

    அதேசமயத்தில் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வரின் உருவப்படமோ அல்லது மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களோ இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai