சுடச்சுட

    

    இலங்கை சிறையில் உள்ள 153 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    By dn  |   Published on : 06th March 2014 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_cm

    இலங்கை சிறையில் உள்ள 153 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதன்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    இலங்கைக் கடற்படையின் அத்துமீறிய செயல்களை வேதனையுடன் தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. இதனால் அவர்களுடைய குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்புகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

    மார்ச் 3-ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்கள் 8 படகுகளில் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையால் கடத்தப்பட்டுள்ளனர்.

    தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சு நடத்த வேண்டும் என தங்களுக்கு 20-9-2013-இல் கடிதம் எழுதியிருந்தேன். அதன்படி இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையே மார்ச் 13-ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதோடு, அவர்களுடைய படகுகளையும் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் இந்திய மீனவர்கள் 32 பேரையும், அவர்களுடைய 8 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் கடத்திச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மார்ச் 13-ஆம் தேதி கொழும்பில் நடைபெற உள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் இலங்கைக் கடற்படையின் இந்தச் செயல் அமைந்துள்ளது.

    இதை மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்ப்பது, தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் இருப்பதையே காட்டுகிறது.

    தமிழகத்தைச் சேர்ந்த 116 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    அதில், 5 பேர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். 31 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு இலங்கை சிறையில் உள்ள 153 மீனவர்களையும், அவர்களுடைய 39 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai