Enable Javscript for better performance
ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்: தப்பியது உழவன் எக்ஸ்பிரஸ்- Dinamani

சுடச்சுட

    

    ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த 2 ரயில்கள்: தப்பியது உழவன் எக்ஸ்பிரஸ்

    By dn  |   Published on : 06th March 2014 11:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக 2 ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓட்டுநர் சரியான நேரத்தில் கவனித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு செல்லும் பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயில் நான்காவது நடைமேடைக்கான இருப்புப் பாதையில் நிறுத்தப்பட்டது.

    அப்போது, சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு உழவன் விரைவு ரயில் வந்தது. இந்த ரயில் வழக்கமாக மூன்றாவது நடைமேடையில்தான் நிற்கும். ஆனால், இந்த ரயில் வியாழக்கிழமை நிலையத்துக்குள் நுழையும்போது தடம் மாறி நான்காவது நடைமேடைக்கான இருப்புப் பாதையில் செல்லத் தொடங்கியது.

    இந்த ரயிலை ஓட்டிய ஓட்டுநர் எதிரில் பயணிகள் ரயில் நிற்பதைக் கவனித்தார். இதையடுத்து, பயணிகள் ரயிலுக்கு சுமார் 200 அடிக்கும் முன்பாக விரைவு ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தகவலறிந்த ரயில்நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

    பின்னர், உழவன் விரைவு ரயிலை பின்புறம் நகர்த்தி மூன்றாவது நடைமேடைக்கான இருப்புப்பாதையில் செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு

    செய்தனர். இதையடுத்து, காலை 8.25 மணியளவில் உழவன் விரைவு ரயில் வழக்கம்போல் மூன்றாவது நடைமேடை இருப்புப் பாதைக்கு சென்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ரயில்வே துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், சிக்னல் கோளாறு காரணமாக உழவன் விரைவு ரயில் தடம் மாறிச் சென்றது என்பது தெரிய வந்ததாம்.

    இந்தச் சம்பவம் காரணமாக, திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில், திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் ஆகியவற்றின் இயக்கத்தில் ஏறத்தாழ அரை மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai