சுடச்சுட

  
  karunanidh

  முற்றிலும் கற்பனையின் அடிப்படையில் கருணாநிதி மனு தாக்கல் செய்துள்ளார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவாரூர் தேர்தல் அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திமுக தலைவர் கருணாநிதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

  திருவாரூர் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தேன். அதில், சில சொத்து விவரங்களை மறைத்து விட்டதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரியான திருவாரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

  இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  என்னுடைய தாயாரின் சமாதி இருக்கும் இடத்தை வேட்பு மனு படிவத்தில் நான் குறிப்பிடவில்லை என்பதே என் மீதுள்ள குற்றச்சாட்டாகும். அந்த நிலத்தின் மூலம் எனக்கு எந்த வருவாயும் கிடைக்கவில்லை.

  எனவே, நீதிமன்றத்தில் என் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து, திருவாரூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனையும் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

  இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பி.பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: மனுதாரர் தாக்கல் செய்த மனு சட்டப்படி விசாரணைக்கு உகந்ததல்ல. அந்த மனுவை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர் குற்றத்தில் ஈடுபட்டாரா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

  அந்த மனு எந்த விதத்திலும் தகுதி இல்லாததது, முற்றிலும் கற்பனையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் வாதம் முற்றிலும் சட்டரீதியாக இல்லை.

  இது தவிர, நான் புகார் அளிப்பதற்கு தகுதியான அதிகாரி இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டும் தவறானது. தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதும் மாவட்ட வருவாய் அதிகாரிதான் அந்தத் தொகுதிக்கு தேர்தல் அதிகாரி.

  மேலும், தேர்தல் சமயத்தில் ஒரு தொகுதியில் தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்தவர், அவர் எங்கிருந்தாலும் நீதிமன்றத்துக்குத் தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். நேரில் ஆஜராக வேண்டும். இது தேர்தல் மற்றும் தேர்தல் அல்லாத நேரங்களிலும் பொருந்தும். இந்த சூழ்நிலையில் மனுதாரரின் வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது.

  இந்தப் பிரச்னை தொடர்பாக எந்த உத்தரவையும் தேர்தல் ஆணையம் பிறப்பிக்கவில்லை என கருணாநிதியின் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வேட்பு மனு தாக்கலின்போது சில சொத்துகளை திமுக தலைவர் கருணாநிதி மறைத்துள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எஸ்.ஜெகநாதன் என்பவர் ஒரு புகார் அனுப்பினார். அந்தப் புகார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகுதான் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி மனுதாரர் மீது நான் புகார் பதிவு செய்தேன். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை என மனுதாரர் (கருணாநிதி)

  கூறுவது தவறானது. எனவே இந்த மனுவை அதிக அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

  இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai