சுடச்சுட

  

  திமுகவில் இணைந்த ஒரே நாளில் அதிமுகவுக்கு திரும்பிய கவுன்சிலர் கணவர்: அமைச்சர் முன்னிலையில் விளக்கம்

  By dn  |   Published on : 06th March 2014 11:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காந்திசெல்வன் எம்.பி. முன்னிலையில் புதன்கிழமை திமுகவில் இணைந்த வெண்ணந்தூர் பேரூராட்சி அதிமுக உறுப்பினரின் கணவர், ஒரே நாளில் அதிமுகவுக்கு திரும்பினார்.

  தான் தொடர்ந்து அதிமுகவிலேயே இருப்பதாகவும், திமுகவில் இணைந்ததாக வெளியிடப்பட்ட தகவல் திட்டமிட்ட நாடகம் என்றும், அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் அவர் விளக்கம் அளித்தார்.

  நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சியின் 13ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் கோமதி. இவரது கணவர் சீனிவாசன் மாவட்ட திமுக செயலர் செ.காந்திசெல்வன் எம்.பி. முன்னிலையில் புதன்கிழமை திமுகவில் இணைந்ததாகவும், அவருக்கு காந்திசெல்வன் திமுக துண்டு, கரைவேட்டி அணிவித்து பாராட்டுத் தெரிவித்ததாகவும் தகவல்களுடன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

  இந்த நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலருமான பி.தங்கமணி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.

  அப்போது அவர் கூறியது: வெண்ணந்தூர் அதிமுக பேரூர் இளைஞரணிச் செயலராக 2001ஆம் ஆண்டு முதல் செயலாற்றி வருகிறேன். எனது மனைவி கோமதி அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று வெண்ணந்தூர் 13ஆவது வார்டு உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.

  இந்த நிலையில், மக்களவைத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து வார்டுக்கு நிதி வழங்குவதாக அழைப்பு விடுத்ததன் பேரில், காந்திசெல்வன் எம்.பியை சந்தித்தேன். அப்போது எனக்கு காந்திசெல்வன் துண்டு அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு, நிதியை அடுத்த வாரம் தருவதாகக் கூறி அனுப்பினர். இதன்பிறகு, அந்தப் புகைப்படத்தைக் கொண்டு நான் திமுகவில் இணைந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியிட்டனர். இது திட்டமிட்ட மோசடிச் செயலாகும். இதற்காக காந்திசெல்வன் எம்.பியைக் கண்டிக்கிறேன் என்றார் அவர்.

  அப்போது அவர் அதிமுக கரை வேட்டியை உடுத்தியிருந்தார். இதன்படி, திமுகவில் இணைந்ததாக தகவல் வெளியான ஒரே நாளில் அதிமுகவிலேயே இருப்பதாக பேரூராட்சி உறுப்பினரின் கணவர் விளக்கம் அளித்ததுடன், காந்திசெல்வன் எம்.பி. மீது குற்றஞ்சாட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

   

  "அதிமுகவின் மிரட்டலால் அச்சம்'

   

  அமைச்சர் தங்கமணியின் முன்னிலையில் அதிமுகவிலேயே நீடிப்பதாக சீனிவாசன் விளக்கமளித்துள்ளது அந்தக் கட்சியினரின் மிரட்டலால் நடந்த செயலாக இருக்கலாம் என்று மாவட்ட திமுக செயலர் செ.காந்திசெல்வன் எம்.பி. தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

  திமுகவில் இணைவதாக சீனிவாசன் வந்த போது அதிமுகவின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு திமுகவின் துண்டு, கரைவேட்டி அணிவிக்கப்பட்டது. அவர் அதைக் கட்டிக் கொண்டு ஊர் திரும்பினார். இவை விடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சீனிவாசன் வியாழக்கிழமை கூறியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai