Enable Javscript for better performance
திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி: கருணாநிதி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி: கருணாநிதி அறிவிப்பு

    By dn  |   Published on : 06th March 2014 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk

    திமுக தலைமையிலான கூட்டணியின் பெயர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

    திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது:-

    திமுக கூட்டணியை இனி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அழைப்போம்.

    எல்லா இடங்களுக்கும் நான் நேரில் சென்று பிரசாரம் செய்வதற்கு இயலாவிட்டாலும், எந்த வழியாக பிரசாரம் செய்ய வேண்டுமோ, அந்த வழியாக இடைவிடாது பிரசாரம் செய்வேன்.

    திமுகவின் கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்யும்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது யார், அவர்கள் மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா, இல்லையா என்பதற்கான வாதத்தை மட்டும் எடுத்து வைக்க வேண்டும்.

    அதேசமயம் யாரையும் மட்டம் தட்டாமல், யார் மதிப்புக்கும் குறைவு ஏற்படாமல், நயத்தகு நாகரிகம் அணுவளவும் சிந்தாமல், சிதறாமல் பேச வேண்டும்.

    நலிவுற்ற மக்களைக் கரையேற்றுவதற்காகத்தான் இந்தக் கூட்டணி என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

    கட்சிகளுக்கு மரியாதை: மாவட்ட அளவிலும், தாங்கள் (கூட்டணி கட்சியினர்) மதிக்கப்பட வேண்டுமென்று ஒரு சில கருத்துகள் இங்கே கூறப்பட்டன.

    மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், ஒன்றிய அளவில்கூட கூட்டணி கட்சியினர் கருத்துகள் மதிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை நானே முன் நின்று செய்வேன்.

    வெகு விரைவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அதில் இது தொடர்பான அறிவுரை வழங்கப்படும்.

    பெரியார், அண்ணா வழியில் மாற்றுக் கட்சியினரை மதிக்கக் கற்றுக்கொண்டுள்ள நாங்கள், எந்தச் சூழ்நிலையிலும் உங்களை மதிக்கத் தவற மாட்டோம். தொடர்ந்து இந்த மரியாதை கடைப்பிடிக்கப்படும் என்பதை உறுதிபட மீண்டும் கூறுகிறேன்.

    ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவர். அவர் வாயிலாக அந்தத் தொகுதி நிலவரங்களை அறியவும், தேர்தல் பணிகளை விரைந்து முடுக்கியும் விடுவோம். கூட்டணிக் கட்சியினர் தொகுதி நிலவரங்களை எல்லா வழிகளிலும் தெரிவிக்கலாம்.

    ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு இந்தக் கூட்டத்தில் இன்று கொடியேற்றுவோம். அந்தக் கொடி உயரப் பறக்கட்டும். அந்தக் கொடியின் நிழலில் தமிழக மக்களை மட்டுமல்லாமல், நாட்டு மக்களை மதச்சார்பற்ற ஓரணியில் திரட்டுவோம் என்றார் கருணாநிதி.

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்ஃதாப், பேராயர் எஸ்றா சற்குணம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் சந்தானம், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai