சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்: அம்மா குடிநீரில் முதல்வர் படம் மறைப்பு; உணவக பலகைகளில் மாற்றப்படவில்லை

    By dn  |   Published on : 06th March 2014 11:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mess

    தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் எதிரொலியாக, அம்மா குடிநீர் பாட்டில்களில் முதல்வர் ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் அங்காடிகளில் முதல்வரின் படங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அம்மா உணவகங்களில் உள்ள பெயர் பலகை மற்றும் கல்வெட்டுகளில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை.

    மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை நெறிமுறைகளை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

    முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களில் அவரது படங்கள் இடம்பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அரசின் இலவச திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    அனைத்து பஸ் நிலையங்களிலும் ஜெயலலிதாவின் படம் கொண்ட ஸ்டிக்கருடன் ரூ.10-க்கு அம்மா குடிநீர் பாட்டில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    வியாழக்கிழமை முதல் இந்த பாட்டில்களில் ஸ்டிக்கர் அகற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், பஸ் நிலையங்களில் குடிநீர் விற்பனை செய்யப்படும் நிலையங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் வெள்ளைக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து, குடிநீர் நிலைய விற்பனையாளர்கள் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு குறித்து, புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் ஆயிரக்கணக்கான குடிநீர் பாட்டில்கள் ஏற்கெனவே விற்பனைக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அவற்றின் ஸ்டிக்கர்களும் அகற்றப்படுகின்றன.

    அம்மா உணவகங்களில் நிலைமை: அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களின் பெயர்ப் பலகை மற்றும் தொடக்க விழாவின் போது திறக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகியவற்றில் முதல்வரின் பெயர் மற்றும் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உணவகங்களும் தொடர்ந்து வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai