சுடச்சுட

  

  பாஜகவுடன் கூட்டணி தொடருமா?: பாமக நிர்வாகிகள் இன்று அவசரக் கூட்டம்

  By dn  |   Published on : 06th March 2014 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pmk

  மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலேயே தொடரலாமா அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக பாமக தலைமை நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை கூடுகிறது.

  இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

  பாமக தலைமை நிர்வாகக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.

  கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

  முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற முடிவு செய்தது. பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கையும், தமிழக தலைவர்களையும் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கூட்டணி அமைப்பது தொடர்பான உடன்பாடும் எட்டப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

  ஆனால், இதற்கு முன்பாகவே பாமக சார்பில் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது.

  இந்தத் தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகளை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுக்குமாறு பாஜக வலியுறுத்தி வருகிறது. இதனை பாமக ஏற்றுக்கொள்ளவில்லை.

  மேலும் தேமுதிகவின் முடிவுக்காக பாஜக காத்திருப்பதுடன், மற்ற கட்சிகளையும் காக்க வைப்பது பாமகவின் தலைமைக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாஜக கூட்டணியிலிருந்து விலகும் எண்ணத்தில் பாமக இருப்பதாக தெரிகிறது.

  இந்நிலையில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடலாமா என்று பாஜக தலைவர்கள், பாமக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு செவ்வாய்க்கிழமை கேட்டுள்ளனர். அதற்கு பாமக தலைவர்கள், பாமக கூட்டணியில் இருப்பதாக அறிவிக்க வேண்டாம் என்று கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்நிலையில்தான் பாமகவின் தலைமை நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் தைலாபுரத்தில் வியாழக்கிழமை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணியிலேயே தொடரலாமா அல்லது வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது பற்றி விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai