Enable Javscript for better performance
மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாள்கிறார் ஜெயலலிதா- Dinamani

சுடச்சுட

  
  gnadesigan

  மத்திய அரசு மீது முதல்வர் ஜெயலலிதா மோதல் போக்கை கையாண்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார்.

  இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா,மத்திய அரசை கடுமையாக

  விமர்சித்திருக்கிறார். மத்திய அரசு தமிழகத்துக்கு பத்து துரோகங்கள் செய்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  இலங்கைக்கு ராணுவப் பயிற்சியோ, ஆயுதங்களோ வழங்கவில்லை என்று அன்றைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்திய பிறகும் மீண்டும் அதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

  தமிழக அரசின் துரோகம்:ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, மற்ற ஆசிய நாடுகள் எதிர்த்த போதிலும் இந்தியா மட்டுமே ஆதரித்தது. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதித்தால் இலங்கைத் தமிழர்கள் எங்கிருந்து உதவி பெறுவார்கள்?

  இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் பங்கேற்றதையும், தமிழர் பகுதிகளுக்கு சென்றதையும் தமிழக அரசியல் கட்சிகள் பாராட்டின. இந்தியப் பிரதமர் மாநாட்டுக்குச் சென்றிருந்தால் தமிழர் பகுதிகளுக்கும் சென்றிருப்பார்.

  பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, அதிமுக அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகமாகும்.

  மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சு நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், அதற்கான தேதியை முடிவு செய்வதில் தமிழக அரசு தாமதப்படுத்தியது.

  இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத் தீவை மீட்க வேண்டுமானால் இரு நாடுகளும் பேச வேண்டுமே தவிர, நீதிமன்றம் மூலம் மீட்க முடியாது.

  மின்வெட்டுக்கு காரணம் யார்?: மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்குத்தான் அதிக மின்சாரம் வழங்கப்படுகிறது.

  கடந்த ஜனவரியில் நாடு முழுவதும் உள்ள மின் வழித் தடங்களை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தால் தமிழகம் மின்வெட்டால் அவதிப்பட்டிருக்கும். கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் உரிய நேரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் அதிகமாக மின்சாரம் கிடைத்திருக்கும்.

  கர்நாடகத்தில் தேர்தல் வரப்போகிறது என்பது தெரிந்தும் தமிழகத்துக்கு 9 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இவையெல்லாம் தமிழக மக்களுக்கு செய்த துரோகமா?

  டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவதால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்கிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம், பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திய போதும் என்ன நியாயம் சொல்லப்பட்டதோ, அது மத்திய அரசுக்கும் பொருந்தும்.

  மண்ணெண்ணெய் ஒதுக்கீடும், தமிழக அரசு கேபிள் சேவைக்கான அனுமதியும் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படுபவை. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதி எவ்வளவு என்பதை முதல்வர் வெளியிட வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் மத்திய அரசின் பங்கீடு எவ்வளவு என்பதை வெளியிட்டால் சாயம் வெளுக்கும்.

  வளர்ச்சி குறைவு: திட்டக்குழு அறிக்கையின்படி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நாட்டிலேயே குறைவாக 4.14 சதவீதமாக உள்ளது. 2005-2006-க்குப் பிறகு இது மிகக் குறைவான வளர்ச்சியாகும். மின்சார பற்றாக்குறையை சரியாகக் கையாளவில்லையென்பதால் விவசாயத் துறையில் 12 சதவீதம், உற்பத்தித் துறையிலும் 1.3 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளது. இதுதான் தமிழக அரசின் சாதனை.

  காங்கிரஸின் சாதனை:காங்கிரஸ் கட்சி 129 ஆண்டுகள் வரலாறு கொண்டது. கடந்த 10 ஆண்டுகளாக எண்ணற்ற சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது. தமிழகத்துக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் கிடைத்துள்ளன.

  இடையில் சில ஆண்டுகளைத் தவிர 1947 முதல் இன்று வரை நாட்டை காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து பலர் முயற்சித்தும் காங்கிரûஸ வீழ்த்த முடியவில்லை.

  தமிழகத்துக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. துரோகம் என்பது எங்கள் அகராதியில் இல்லை.

  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மக்களின் நலன் என்று வருகிறபோது அரசியலை மறந்து, மத்திய அரசோடு இணக்கமாகப் பேசி, திட்டங்களைப் பெறுகின்றனர்.

  ஆனால், பதவியேற்ற நாளில் இருந்தே மத்திய அரசோடு முதல்வர் ஜெயலலிதா மோதல் போக்கை கையாண்டு வருகிறார் என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai