Enable Javscript for better performance
ராமேசுவரம் காவல் நிலையத்தில் இலங்கை கடற்படையினர் மீது மேலும் ஒரு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் காவல் நிலையத்தில் இலங்கை கடற்படையினர் மீது மேலும் ஒரு வழக்கு

    By dn  |   Published on : 06th March 2014 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம், பகுதியிலிருந்து பிப்ரவரி 4 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க ராமேசுவரம், காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் மேலும் ஒரு புகார் செய்துள்ளார். உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, பல பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராமேசுவரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    இவர்கள் கச்சத்தீவு, தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், சில படகுகளிலிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியும், பிடித்து வைத்திருந்த மீன்களையும், மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசியும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், கொலை மிரட்டல் விடுத்து விரட்டியடித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மீனவர் ராமேசுவரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முனியசாமி, இதுதொடர்பாக மார்ச் 4 ஆம் தேதி ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், இலங்கை கடற்படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 341, 384, 506/2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இதற்கு முன்னதாக இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராமேசுவரம், பாம்பன் பகுதிகளை சேர்ந்த சகாயராஜ், ஜேசுராஜ், பி.ஜி. சேகர், ஜான் பிரிட்டோ ஆகிய மீனவர்கள் கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் ராமேசுவரம், பாம்பன் காவல் நிலையங்களில் புகார் செய்தனர். அவற்றின்மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai