Enable Javscript for better performance
அதிமுக கூட்டணியிலிருந்து இடதுசாரிகள் விலகல்- Dinamani

சுடச்சுட

  
  marxist

  அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

  இதன் மூலம் கடந்த 2009 முதல் 5 ஆண்டுகள் அதிமுகவுடன் நீடித்த கூட்டணி உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியது:

  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளை முறியடிப்பதற்கு, தமிழகத்தில் அதிமுகவுடன் இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு கண்டு, போட்டியிடுவது என முடிவு செய்தோம்.

  இதற்காக நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளில் அதிமுகவின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தையும் அதிமுக தனித்தே தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.

  பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்:

   

  கேள்வி: தனித்துப் போட்டியிடுவீர்களா?

   

  ஜி. ராமகிருஷ்ணன்: இன்று எடுத்த முடிவை இரு கட்சி நிர்வாகிகளும் அறிவித்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அடுத்தடுத்து அறிவிப்போம்.

   

  கேள்வி: அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?

   

  ஜி. ராமகிருஷ்ணன்: அதற்கான காரணத்தை ஆராய்வதற்கான நேரம் இதுவல்ல. அதிமுகவுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை 6 முறை தொகுதிப் பங்கீடு குறித்து பேசினோம். அதிமுகவின் அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை.

   

  கேள்வி: பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் போன்ற தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை அறிவித்தார்கள். அதன் பிறகு திடீரென கூட்டணியிலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?

   

  தா. பாண்டியன்: அதற்கான காரணத்தை அறிய நாங்களும் முயற்சிக்கிறோம். நீங்களும் (பத்திரிகையாளர்கள்) முயற்சியுங்கள்.

   

  கேள்வி: அதிமுகவின் அணுகுமுறையால் கடைசிநேரத்தில் உங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதே?

   

  தா. பாண்டியன்: இது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல. சமூகத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி. சமூகத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் போக்கப் பிறந்தவர்களே கம்யூனிஸ்ட்டுகள்.

   

  கேள்வி: அதிமுகவின் முடிவால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதா?

   

  தா. பாண்டியன்: இந்த உலகத்தில் யாரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வருத்தம் அடையச் செய்யும் முடிவை எடுக்க முடியாது.

   

  கேள்வி: திமுகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?

   

  ஜி. ராமகிருஷ்ணன்: இன்று எடுத்துள்ள முடிவை அறிவித்துள்ளோம். இத்துடன் பேட்டி முடிந்தது.

   

  டி.கே. ரங்கராஜன்: அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் அறிவிக்கும் வரை பத்திரிகையாளர்கள் தங்களது கற்பனை வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

   

  திமுக கூட்டணியில் இடதுசாரிகள்?

   

  அஇஅதிமுக கூட்டணியிலிருந்து போதிய இடங்கள் கிடைக்காததால் வெளியேறிய இடது சாரிகளுக்கு திமுக தரப்பில் இருந்து தங்களது அணியில் சேர அழைப்பு தரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

  அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டிற்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே தலா 3 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கித் தரவேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், அதிமுக தரப்பில் இருந்து தலா ஒரு இடம் மட்டுமே தருவதாகக் கூறியதால் இடது சாரிகள் அந்த அணியில் இருந்து வெளியேறினர்.

  இப்போழுது இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 இடங்களை ஒதுக்கித் தர திமுக தரப்பு தயாராக இருப்பதாகவும், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் அறிவாலயத்தில் இருந்து சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது.

  இது பற்றி கேட்டபோது, "இதுவரை அப்படி எந்தத் தகவலும் வந்ததாகத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை (மார்ச் 7) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான எங்களது கலந்தாலோசனைக்குப் பிறகுதான் எந்தவிதமான முடிவையும் எடுக்க உத்தேசித்திருக்கிறோம். மிதப்பதாக இருந்தாலும் மூழ்குவதாக இருந்தாலும் இடதுசாரிகள் ஒன்றாகவே இருப்பது என்பதில் தீர்மானமாக இருக்கிறோம்' என்று தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரங்கராஜன்.

  அவர் மேலும் கூறுகையில், 'முதல்வரை யாரோ சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். எங்களுக்கு மிகப் பெரிய வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இடதுசாரிகள் தான் ஒரு அணிக்கு கௌரவமும் வலிமையும் சேர்க்கிறார்கள் என்பதுதான் அனுபவபூர்வ உண்மை' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai