சுடச்சுட

  
  election_krishnamurthi

  நாட்டில் நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு அரசியல் கட்சிகளை ஒழுங்குப்படுத்துவதற்கான தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

  விஐடியில், தேர்தலில் வாக்காளரின் கண்ணியம் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இந்நிகழ்வுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என்.கோபாலசுவாமி, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

  விஐடி வேந்தர்: இதில் பேசிய விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஊழல் பெருகி வருவதுடன், அரசியலில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்துள்ளது.

  நாட்டில் உருவாகும் இளம் புதிய வாக்காளர்களுக்கு ஊழலற்ற அரசை ஏற்படுத்தும் பொறுப்பும், கடமையும் உள்ளது. தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்தப்படும், குற்ற வழக்கு பின்னணி கொண்டவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

  டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி: நாட்டில் ஊழலற்ற, நேர்மையான ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்றால், இப்போதைய தேர்தல் முறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் வகையிலான நிதி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் பெருகி வரும் அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சாதாரண நேர்மையான குடிமகன் கூட தேர்தலை சந்திக்கும் ஜனநாயகம் உருவாகும் என்றார் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

  என்.கோபாலசுவாமி: கடந்த மக்களவையில் 25 சதவீத உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும், அவர்களில் 50 சதவீதத்தினர் மிக கடுமையான குற்றப் பின்னணி உடையவர்களாகவும் இருந்தனர்.

  இன்றைக்கு அரசியல், ஒரு பங்கு பணத்தை செலவிட்டு பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. அரசியலில் நேர்மையான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பை இன்றைய இளைய தலைமுறையினர் ஏற்க வேண்டும். நாட்டில் இன்றைக்கு புதிதாக உருவெடுத்துள்ள 10 கோடி இளம் வாக்காளர்கள் இதில் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார் என்.கோபாலசுவாமி.

  தேவசகாயம்: நாட்டில் அதிகாரம் படைத்தவர்கள் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ அல்ல. உண்மையில் வாக்காளர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள். வாக்குகளைப் பணம், மது, உணவுக்காக விற்பது அர்த்தமற்றது. இத்தகைய வாக்குகளைப் பெற்று ஆட்சி நடத்தும் அரசின் ஊழலுக்கு வாக்காளரும் பொறுப்பு.

  வாக்குகளை விற்பதால், அந்தஸ்து, ஒருமைப்பாடு, சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை நாம் இழக்கிறோம் என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டும். அதற்கு இன்றைய இளைய தலைமுறை புதிதாக உருவெடுத்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்றார் தேவசகாயம்.

  நிகழ்ச்சியில் ஆட்சியர் இரா.நந்தகோபால், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai