சுடச்சுட

    

    ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு: நட்புரீதியாக சூதாடியதாக குருநாத் மெய்யப்பன் ஒப்புதல்

    By dn  |   Published on : 07th March 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    guruna

    ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் நட்புரீதியாக விண்டூ தாராசிங்கிடம் சூதாடியதாக (பெட்டிங்) குருநாத் மெய்யப்பன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

    ஐ.பி.எல். சூதாட்ட வழக்குத் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 பேர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் முக்கிய பிரமுகர் உள்பட 21 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    முன்னதாக, இந்த வழக்கை முதலில் விசாரித்த க்யூ பிரிவு போலீஸார் ஐ.பி.எல். சூதாட்ட கும்பலுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும், சூதாட்டத்தில் ஹவாலா மற்றும் கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை செய்தனர். இந்த விசாரணை முழுமை அடையும் முன்னரே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இந்த வழக்கில் நேரடியாக ஈடுபட்ட தரகர்களையும் மற்றும் சூதாட்டத்தை நடத்திய இரு தொழிலதிபர்களையும் மட்டுமே கைது செய்தனர். வழக்கின் முதல் கட்ட விசாரணையில் சென்னையில் மட்டும் 168 தரகர்கள் இருப்பதாக க்யூ பிரிவு போலீஸார் அறிக்கையில் கூறியிருந்தபோதும் எந்த தரகர்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்யவில்லை.

    இதையடுத்து இந்த சூதாட்ட வழக்கில் விசாரணை நடத்த, ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் 3 நபர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

    இந்தக் குழு நடத்திய விசாரணையில், க்யூ பிரிவு எஸ்.பி.யாக இருந்த சம்பத்குமார் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில் கிரிக்கெட் வீரர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது குறித்த விவரங்களை ஆதாரத்துடன் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் முத்கல் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும், ஜெய்ப்பூர் போலீஸாரும் வழக்கின் விசாரணையை முழுமையாக செய்யவில்லை என்றும், சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதும், வெளிநாட்டு தொடர்பு இருப்பது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

    இதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சி.பி.சி.ஐ.டி. மீண்டும் விசாரணை செய்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கொடுத்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

    குருநாத் மெய்யப்பன் அளித்த வாக்குமூலத்தில்,"2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியைப் பார்க்கச் சென்றபோது எனக்கு விண்டூ தாராசிங் அறிமுகம் கிடைத்தது. அதனத் தொடர்ந்து இருவரும் நண்பர்களாக இருந்தோம். அவருடன் நட்புரீதியாகவே சூதாட்டத்தில் (பெட்டிங்) ஈடுபட்டேன்' என்று தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

    சென்னையைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுடன் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் நெருங்கிய நட்புடன் இருந்தாலும், அவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபடுவது தனக்கு தெரியாது என்றும் அந்த வாக்குமூலத்தில் குருநாத் கூறியுள்ளாராம். சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கேட்ட 40 எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு அளித்த பதிலில் இந்த தகவலை குருநாத் பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வாக்குமூலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீஸார், நீதிபதி முத்கல் கமிட்டியிடம் அளித்துள்ளனர். இதற்கிடையே குருநாத் மெய்யப்பனிடம் மீண்டும் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு நாள்களில் குருநாத் மெய்யப்பனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மீண்டும் விசாரணை செய்வார்கள் என கூறப்படுகிறது. இதில் குருநாத் மெய்யப்பன் மற்றும் விக்ரம் அகர்வால் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டனரா என்பது தெரிய வரக்கூடும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai