சுடச்சுட

    
    udayakumar

    காணொலிக் காட்சி முறையில் உதயகுமாரை பிரசாரம் செய்யவைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

    கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தை வழிநடத்திச் சென்ற எஸ்.பி.உதயகுமார், மை.பா.ஜேசுராஜ் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். "எளிய மக்கள் கட்சி' என்ற பெயரில் தமிழகத்தில் அக் கட்சியின் கீழ் பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எஸ்.பி.உதயகுமாரும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் மை.பா.ஜெசுராஜும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தங்களது சின்னத்தை மக்களிடையே கொண்டுசெல்லும் வகையில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூர், பேட்டை, சுத்தமல்லி, மேலப்பாளையம் என திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் துடைப்பம் சின்னம்குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை முடித்துள்ளனர். அடுத்தகட்டமாக ஒவ்வொரு வட்டத் தலைநகரங்களில் தொடங்கி தங்களது பிரசாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    உதயகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குகள் உள்ளதால், அவர்கள் பிரசாரத்துக்காக இடிந்தகரையில் இருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உள்ளது. எனவே, காணொலிக் காட்சி முறையில் பிரசாரத்தை எடுத்துச் செல்லலாமா என்று ஆம் ஆத்மி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    முதல்கட்டமாக திருநெல்வேலியில் வரும் 9-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவும், அதில் காணொலிக் காட்சி மூலம் எஸ்.பி.உதயகுமார், மை.பா.ஜேசுராஜ் ஆகியோரை பேச வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஜேக்கப் டி பாலா, ஏ.எஸ்.ரகு, ராகவன், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோசப் சகாயராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்று பேச உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai