சுடச்சுட

  

  சென்னையில் 283 பதற்றமான வாக்குச்சாவடிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

  By dn  |   Published on : 07th March 2014 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election_commission

  சென்னையில் மொத்தம் 283 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் தெரிவித்தார்.

  தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் சென்னையில் தேர்தலுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை விளக்கினார்.

  அப்போது அவர் கூறியது: தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் மொத்தம் 3,254 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள சாவடிகளைப் பிரித்து, மொத்தம் 84 துணை வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  எழும்பூரில் அதிகபட்சம்: காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மொத்தம் 255 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதுதவிர 28 சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  இதில் அதிகபட்சமாக எழும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் 35 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன. ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் இல்லை. மக்களவை தொகுதிவாரியாக பார்க்கும்போது, மத்திய சென்னையில் அதிகபட்சமாக 122 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன. வடசென்னையில் 45, தென்சென்னையில் 88 சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக உள்ளன.

  இந்த வாக்குச்சாவடிகளுக்குத் தேர்தலின்போது கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு மற்றும் மத்திய துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்படும். வெப் கேமரா மற்றும் நுண் கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

  வாக்காளர் பெயர்சேர்ப்பு: சென்னையில் ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 36 லட்சத்து 36,199 பேர் உள்ளனர். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், நீக்கம் கோருபவர்கள், திருத்தம் செய்பவர்கள் ஆகியோர் தொடர்ந்து விண்ணப்பிக்காலம்.

  பெயர் சேர்க்கும் பணிகள் வேட்புமனு தாக்கல் இறுதி நாளான ஏப்ரல் 5-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இருப்பினும், இதற்கு 10 நாள்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

  சிறப்பு முகாம்: மார்ச் 9-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை அங்கேயே பொதுமக்கள் சரிபார்த்து, தேவைப்பட்டால் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

  சென்னையில் தேர்தல் பணிகளில் 20ஆயிரத்து 863 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

  சுவர் விளம்பரங்கள் தடை செய்யப்படும். அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றப்படும் என்று தெரிவித்தார் அவர்.

  புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண்

  தேர்தல் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்கான இலவச அழைப்பு எண்ணை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டார்.

  தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் கண்காணிக்கும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை மாநாகராட்சி தலைமை அலுவலகமானரிப்பன் கட்டடத்தில் செயல்படும்.

  இதில் பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கலாம். இதற்கு 1800 4257012 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் கபூர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai