Enable Javscript for better performance
நாகர்கோவிலில் மார்ச் 9-ல் ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டம் பொருட்காட்சி மைதானத்துக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவிலில் மார்ச் 9-ல் ஜெயலலிதா பிரசார பொதுக்கூட்டம் பொருட்காட்சி மைதானத்துக்கு மாற்றம்

    By dn  |   Published on : 07th March 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வருகிற 9ஆம் தேதி மேற்கொள்ள உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்ட இடம், நாகர்கோவிலில் உள்ள பொருட்காட்சி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக குமரி மேற்கு மாவட்டச் செயலர் டி. ஜான் தங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்யும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    நாகராஜா திடல் பொதுமக்களுக்கு வசதியாக இருக்காது என்பதால், பிரசாரத்துக்காக மாற்று இடத்தைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் புதன்கிழமை நாகர்கோவில் வந்தனர்.

    இவர்கள், அமைச்சர் கே.டி. பச்சைமாலுடன் சென்று நாகர்கோவிலில் மூன்று இடங்களைப் பார்வையிட்டனர். இறுதியாக நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி அருகே உள்ள பொருட்காட்சி மைதானத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது எனத் தீர்மானித்தனர்.

    இதையடுத்து, வியாழக்கிழமை இந்த மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் உடனடியாக வேறு இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த உதிரிபாகங்களும் அகற்றப்பட்டன.

    ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் தரைப்பகுதியை சமதளப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முட்புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேடை அமைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மைதானத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை அமரலாம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த மைதானத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆயுதப்படை மைதானம் உள்ளது. எனவே, ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் கார் மூலம் பிரசார மேடைக்கு எளிதாக வர முடியும். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai