சுடச்சுட

  
  jaya_speech

  அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

  நாகை மாவட்டம்,மயிலாடுதுறை அடுத்த காளகஸ்தினாபுரத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகனுக்கு வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசியது:

  அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களிருந்து இந்திய நாட்டைப் பாதுகாக்கும் தேர்தல். முப்படையை நவீனமயமாக்கவும் வலுப்படுத்தவும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. காங்கிரஸ் கட்சியின் அலட்சியத்தால் நவீன கப்பல்கள்,நீர்மூழ்கி கப்பல்கள்,நவீன விமானங்கள்,நவீன ஆயுதங்கள்,உபகரணங்கள் இல்லை.முப்படைகளையே அலட்சியப்படுத்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக காவல்துறை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருப்பதுபோல அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்திய பாதுகாப்பு துறை விளங்க அதிமுக நடவடிக்கை எடுக்கும். வல்லரசு நாடுகளுக்கு இணையாக பாதுகாப்புத் துறை பலப்படுத்தப்படும்.

  காங்கிரசும் திமுகவும் சேர்ந்து சாமானிய நடுத்தர மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை மத்திய அரசிடமிருந்து பெறக்கூடிய காலம் கனிந்துவிட்டது. இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வாக்குகளை தமிழகத்தின் நலனுக்காகச் செயல்படும் அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என்றார்.

  தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்,நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி. முனுசாமி,மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், எம்எல்ஏக்கள் எம். ரெங்கசாமி (தஞ்சை),எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), எம். சக்தி (சீர்காழி)மற்றும் கட்சியின் தஞ்சை,நாகை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை எம். தங்கமணி, சீர்காழி டி. மூர்த்தி ஆகியோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai