சுடச்சுட

    
    book_release

    காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

    மதிமுக இலக்கியப் பேரவை சார்பில் அக் கட்சியின் தலைமை நிலைய செயலர் தமிழ் மறவன் எழுதிய "அரசியலில் வைகோ ஓர் அதிசயம்', மதிமுக வெளியீட்டு அணி செயலர் வந்திய தேவன் எழுதிய "பெரியாரின் போர்வாள் அண்ணா' மற்றும் மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் மணிவேந்தன் எழுதிய "நம்மால் விடியும்' ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    நூல்களை வெளியிட்டு வைகோ பேசியதாவது:

    இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போர் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இம் முறை கொண்டு வரப்போகும் தீர்மானத்தாலும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக, இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒரு இடத்தில்கூட குறிப்பிடாத அந்த தீர்மானம், இலங்கை அரசுக்கு தான் பயன் தரும்.

    ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும், தனி ஈழம் மலரவும், முதலில் இலங்கை அரசுக்கு, இந்திய அரசிடம் இருந்து கிடைத்துவரும் அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்காத நிலை ஏற்பட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தான், வரும் மக்களவை தேர்தலில் மதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இக்கூட்டணியை கலைக்க மத்திய உளவுத்துறை மூலம் முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றையெல்லாம் முறியடித்து எங்கள் கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும். நாடாளுமன்றத்தில் மதிமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

    பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தாக முக்கிய காரணமாக இருந்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு, மதிமுக சார்பில், நாளை மறுநாள் (மார்ச்.8) சென்னை, அண்ணா நகரில் நன்றி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    தமிழ்மறவன், வந்தியத் தேவன், மணிவேந்தன் போன்ற திறமையான எழுத்தாளர்கள், திராவிட இயக்க கொள்கைகளை கட்டிக்காக்கும் உண்மையான இயக்கமான மதிமுகவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்றார் வைகோ.

    விழாவில்,மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, பொருளாளர் மாசிலாமணி, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai