சுடச்சுட

  

  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகே பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடக்கம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

  By dn  |   Published on : 07th March 2014 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகே புதிய தலைமைச் செயலகம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எம்.கே.பி.நகரைச் சேர்ந்த ஆர்.வீரமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விவரம்: கடந்த ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டது.

  இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால், அந்த ஆணையம் என் மனுவை நிராகரித்து விட்டு அதே ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி மருத்துவமனையாக மாற்ற அந்த அனுமதி வழங்கியது.

  இந்த அனுமதியை எதிர்த்து சென்னையில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தேன். வழக்கை விசாரணை செய்த பசுமைத் தீர்ப்பாயம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, என் மனுவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

  எனவே, புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு தகுதி உள்ளதா என்பதை ஆய்வு செய்யக் குழு அமைத்து அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

  இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், என்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (மார்ச் 6) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பொதுப் பணித்துறையின் துணை செயலர் எஸ்.ராமலிங்கம் பதில் மனு தாக்கல் செய்தார். அதன் விவரம்: பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகே இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஓராண்டு தாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்யலாம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai