சுடச்சுட

    

    வறட்சிக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு மட்டுமே: ஜெயலலிதா பேச்சு

    By dn  |   Published on : 07th March 2014 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய அளவில் வேளாண் உற்பத்தி பாதிப்பைக் கருத்தில் கொண்டு, வறட்சிக்கு நிவாரணம் அளித்தது அதிமுக அரசு மட்டுமே என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

    நாகை அவுரித் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற, நாகை (தனி) தொகுதி அதிமுக வேட்பாளருக்கான வாக்கு சேகரிப்புப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது :

    அதிமுக அரசு அமைந்த முதலாண்டில் 101.52 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி ஈட்டப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டது. 2-ம் ஆண்டில், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்ததன் காரணமாக, உணவு தானிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், பல புதிய உத்திகள் கையாளப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதன் காரணமாக வேளாண் இழப்பு ஓரளவு சரி செய்யப்பட்டது.

    காவிரி நீர் பிரச்னையால் ஏற்பட்ட வறட்சியைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் வறட்சி நிவாரணம் அளித்த ஒரே அரசு அதிமுக அரசுதான்.

    80 விழுக்காடு அரசு மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் 5 குதிரைத் திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், இதுவரை 137 பேர் பயனடைந்துள்ளனர்.

    மீனவர்களுக்குப் பல்வேறு வகையில் உயர்த்தப்பட்ட உதவித் தொகைகள் வழங்கும் அதிமுக அரசு, உள்ளூர் மீனவர்களின் வருவாயை ஊக்கப்படுத்தும் வகையில், நாகை மாவட்டம், நாகூரில் ரூ. 23 கோடி மதிப்பில் மீன் பதனிடும் பூங்கா அமைக்கவும், நாகை மாவட்டம் செருதூரில் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளும் வகையில் மீன் இறங்குதளம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    நாகை வட்டம், பனங்குடி, நாகூர் மற்றும் முட்டம் ஆகிய கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம், பூம்புகாரில் ரூ. 79 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    முதல்வர் அளித்த 9 வாக்குறுதிகள்!

    நாகையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, மக்கள் ஆதரவுடன் மத்தியில் மக்களாட்சி அமையும்போது நிறைவேற்றப்படும் என அளித்த வாக்குறுதிகள்.

    இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். தேவைக்கேற்ப இறக்குமதி மேற்கொள்ளப்படும்.

    விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.

    இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் தண்டனை பெற்றுத் தரும் தீர்மானத்தை இந்தியாவே முன்மொழியும்.

    தமிழை ஆட்சி மொழியாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு முழுமையாக ஒழிக்கப்படும்.

    வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    2 ஜி ஸ்பெக்டரம் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும். தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai