சுடச்சுட

    

    இடதுசாரிகளுக்கு விடை கொடுத்த அதிமுக: சந்தோஷமாக சேர்ந்தோம் பிரிவோம்

    By dn  |   Published on : 08th March 2014 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சந்தோஷமாக சேர்ந்தோம், சந்தோஷமாக பிரிவோம் என்று கூறி கூட்டணியிலிருந்து இடதுசாரி கட்சிகளை அதிமுக வெளியேற்றியுள்ளது.

    அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை (மார்ச் 6) கூட்டாக அறிவித்தன.

    இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனும் வெளியிட்ட கூட்டறிக்கையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் அதிமுக அணுகுமுறையால் உடன்பாடு ஏற்படவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.

    இது குறித்து ஜி. ராமகிருஷ்ணன் தினமணி நிருபரிடம் கூறியது:

    கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆகியோருடன் நானும் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அப்போது இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதனை பிரகாஷ் காரத் - ஜெயலலிதா இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

    அதற்கு முன்பாக பிப்ரவரி 2-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி. பரதன், சுதாகர் ரெட்டி, தா. பாண்டியன் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி அறிவிப்பை கூட்டாக வெளியிட்டனர்.

    பிப்ரவரி 5-ஆம் தேதி தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோருடன் பேசினோம்.

    2009 தேர்தலில் மதிமுக, பாமகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டன. இந்தத் தேர்தலில் வேறு கட்சிகள் எதுவும் இல்லாததால் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி மட்டுமே தர முடியும் என்றனர்.

    அதன் பிறகு 6 சுற்றுகள் அவர்களோடு பேசினோம். ஒவ்வொரு முறையும் தலா 1 தொகுதி என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இந்நிலையில் பிப்ரவரி 24-ஆம் தேதி 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தது.

    கூட்டணி என்று முடிவு செய்த பிறகு எங்களிடம் கேட்காமல் வேட்பாளர்களை அறிவிப்பது நியாயம் தானா சில நாள்களுக்குப் பிறகு வேட்பாளர்களை வாபஸ் பெறச் சொன்னால் மனக்கசப்பு ஏற்படாதா என்று பிப்ரவரி 26-ஆம் தேதி எங்களைச் சந்தித்த அதிமுக குழுவினரிடம் கேட்டோம். அவர்களிடமிருந்து பதில் இல்லை.

    மார்ச் 3-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு பேசினார். ஆனால், 4-ஆம் தேதி மீனம்பாக்கத்தில் பேசும்போது அதிமுக வேட்பாளருக்கு மட்டுமே வாக்கு சேகரித்தார்.

    இந்நிலையில் மார்ச் 3-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அனுப்பிய கடிதத்தில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    நீங்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டீர்கள். மார்க்சிஸ்ட் மாநிலக் குழுவின் கூட்டம் மார்ச் 4, 5 தேதிகளில் நடைபெறவுள்ளது. அதற்குள் தொகுதி உடன்பாட்டை முடித்தால் நல்லது என கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கு பதில் ஏதும் வரவில்லை.

    மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் அதிமுகவுடன் தொகுதி உடன்பாட்டை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தினர். 4-ம் தேதி இரவு 8 மணிக்கு அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் எங்களைச் சந்தித்தனர்.

    அப்போது, 24-ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவித்த போதே மார்ச் 3-ல் பிரசாரம் தொடங்கும் என்பதையும் அறிவித்தோம். அதற்குள் தொகுதி உடன்பாட்டை நீங்கள் முடிக்கவில்லை என்று எங்கள் மீது குற்றம்சாட்டினார்கள்.

    6 முறை பேசியபோதும் தலா 1 தொகுதி என்று மட்டுமே கூறினீர்கள். எங்களின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள் சந்தோஷமாக சேர்ந்தோம், சந்தோஷமாக பிரிவோம் என்று கூறி சென்றுவிட்டனர்.

    அதன் பிறகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேசி அதிமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தோம்.

    கூட்டணி முறிவுக்கு முழுக்க முழுக்க அதிமுகவே காரணம். தனித்தே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம் என சிலர் முதல்வரை தவறாக வழிநடத்துவதால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றார் ஜிó. ராமகிருஷ்ணன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai