Enable Javscript for better performance
தொகுதிப் பங்கீடு: பாஜகவுடன் தேமுதிக, பாமக பேச்சு தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    தொகுதிப் பங்கீடு: பாஜகவுடன் தேமுதிக, பாமக பேச்சு தொடங்கியது

    By dn  |   Published on : 08th March 2014 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tn

    தேமுதிக, பாமகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை பாஜக வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இக்கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    முதல் கட்டமாக பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு பகல் 1.30 மணிக்கு வந்தனர்.

    அவர்களை பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பாஜக குழுவினருடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி, பாஜகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

    இன்னும் இரண்டு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

    செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், பாமகவுடன் பூர்வாங்க பேச்சு தொடங்கியுள்ளது. விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.

    பாமகவுக்கு 8 தொகுதிகள் தரப்படலாம். ஆனால், சேலம், ஸ்ரீபெரும்புதூர் போன்று பாஜக விரும்பும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க மறுப்பதால் தொடர்ந்து பேச்சு நடப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

    பாஜக அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பு ஜி.கே. மணி உள்ளிட்டோர் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸூடன் தியாகராய நகரில் உள்ள பொங்குதமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

    பாமகவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை: பின்னர் மாலை 5.30 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பாஜகவின் பேச்சுவார்த்தை குழுவினர், தேமுதிக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினர்.

    தேமுதிக சார்பில் இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், பாஜக சார்பில் கே.என்.லட்சுமணன், எஸ்.மோகன்ராஜுலு, தமிழிசை செüந்தரராஜன், வானதி சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தேமுதிகவுக்கு தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக இரு தரப்பினரும் விவாதித்தனர்.

    பாமக வேட்பாளர்களை அறிவித்துள்ள 10 தொகுதிகளில் சில தொகுதிகளை தேமுதிக கேட்பதால், தொகுதிகளை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai