சுடச்சுட

    
    oppn

    தனித்துப் போட்டியிடுவதா அல்லது திமுக கூட்டணியில் இணைவதா? என்பது குறித்து முடிவெடுப்பதற்காக இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

    அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக வியாழக்கிழமை அறிவித்தன. இதனால் அவர்கள் திமுக கூட்டணிக்குச் செல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வசதியாகவே விடுதலைச் சிறுத்தைகள் 1 தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை (மார்ச் 6) செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ""கம்யூனிஸ்ட்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்'' என்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் திமுக கூட்டணிக்கு வருமாறு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

    கடைசி நேரத்தில் தங்களுக்கு அதிமுக நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாகக் கருதும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவினர், திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மற்றொரு பிரிவினர் எதிர் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ""தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முடிவு எடுப்பதில் காலம் தாழ்த்தவும் முடியாது. இரு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும்'' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai