சுடச்சுட

    

    வேட்புமனு தாக்கலுக்கு முன்பே பிரசாரம்: செலவுக் கணக்கை எதில் சேர்ப்பது?

    By dn  |   Published on : 08th March 2014 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    praveen_meet

    வேட்புமனு தாக்கலுக்கு முன்பே, தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களின் செலவுகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது? என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.

    மக்களவைத் தேர்தல் தொடர்பாக, தமிழகம் மற்றும் தேசிய அளவில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திமுக சார்பில் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, தேமுதிக சார்பில் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, மார்க்சிஸ்ட் சார்பில் ஆறுமுக நயினார், ரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஜி.பழனிச்சாமி, சேதுராமன், பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன், சரவணபெருமாள், காங்கிரûஸச் சேர்ந்த கோவை தங்கம், சேலம் பாலு மற்றும் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    அதிமுக, பாஜக பிரதிநிதிகள் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் விவரம்:

    ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி (திமுக): தேர்தலை நியாயமாகவும் முறையாகவும் நடத்த வேண்டும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு தேர்தல் அலுவலர் உறுதியளித்தார்.

    கோவை தங்கம் (காங்கிரஸ்): தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலின் போது போட்டி வேட்பாளர்கள் திட்டமிட்டு தெரிவித்த புகார்களின் அடிப்படையில் பல வேட்பாளர்களின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. ஒரு முறை என்றில்லாமல் 15 முறைக்கு மேலாக இதுபோன்ற சோதனைகள் ஒரே நாளில் நடத்தப்பட்டதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற நிலைமை மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்படக் கூடாது என வலியுறுத்தினோம்.

    மேலும், ஒரு வேட்பாளர் வேட்புமனு செய்யும் போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இருந்தால் அவரின் மனு நிராகரிக்கப்படும். வேட்பாளருக்குத் தெரியாமல் இது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதை எடுத்துக் கூறினோம். அப்படிச் செய்திருந்தால் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான விண்ணப்படிவத்தில் உள்ள கையெழுத்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி உறுதியளித்தார்.

    வி.சி.சந்திரகுமார் (தேமுதிக): தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், அதற்கு முன்பும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்துதான் வேட்பாளர்களின் செலவு விவரங்கள் கணக்கில் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் சரியானதல்ல. பணம் கொடுப்பது குறித்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம்.

    ஆறுமுக நயினார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகே வேட்பாளர்களின் செலவு விவரங்கள் கணக்கில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போதே பல வேட்பாளர்கள் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் எனக் கேட்டோம். ஆனால் இது சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே முடியும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார். வாக்களிக்க பணம் கொடுப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    ஜி.பழனிச்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்): ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவிட தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், இந்தச் செலவை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும் என்பதை விரிவாகத் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது. இந்தக் கணக்கு வேட்பாளரின் பெயரிலா? அல்லது வேட்பாளரின் முகவர் பெயரிலா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கும் சூழலில் அவரது பெயரில் கணக்கு ஆரம்பித்து அதை அவரே பராமரிப்பது என்பது இயலாத காரியம். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த சந்தேகங்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆணையத்தின் பதில்கள் பெறப்படும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

     

     

    சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சியினர்

    ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai