Enable Javscript for better performance
இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் புதுமையை புகுத்த வேண்டும்: சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் புதுமையை புகுத்த வேண்டும்: சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத்

    By dn  |   Published on : 09th March 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    medicine

    இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் தன்மை மாறாமல் அவற்றில் புதுமையை புகுத்த வேண்டும் என சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர்தத் வலியுறுத்தியுள்ளார்.

    பாரம்பரிய மூலிகைகள் மற்றும் பழங்கால வைத்திய முறைகள் குறித்த சர்வதேச மாநாடு ("ஐ.சி.எஸ்.இ.-2014') சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆளுநர் சேகர்தத் பேசியது: இந்தியாவில் பின்பற்றப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய பாரம்பரிய வைத்திய முறைகள் அரிய வகை நோய்களைக் கூட எளிதில் குணப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. வைரஸ்களால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளைக் கண்டறிந்து அவற்றில் உள்ள அரிய மூலக்கூறுகளை ஆராய்ச்சிக்குள்படுத்த வேண்டும். அதன் மூலம் உயிர்க்கொல்லி நோயாக விளங்கும் எய்ட்ஸ் நோய்க்குக் கூட நம்மால் தீர்வு காண முடியும்.

    அஸ்வகந்தா, கறிவேப்பிலை, நிலவேம்பு, துளசி உள்பட 4,500-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகைகள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 1,500 மூலிகைகள் மட்டுமே தற்போது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

    இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் மலைவாழ் மக்கள், பழங்குடியினர், பாரம்பரிய வைத்தியர்கள் உள்ளிட்டோர் வாழும் இடங்களுக்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட வேண்டும்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கொடிய நோய்களுக்கும் தீர்வு கண்ட நமது பாரம்பரிய மருத்துவத்தின் தன்மை மாறுபடாமல் அவற்றில் புதுமையை புகுத்த வேண்டும் என்றார் சேகர் தத்.

    முன்னதாக மாநாட்டை தொடக்கி வைத்து பல்கலைக்கழக மானியக்குழுவின் துணைத்தலைவர் ஹெச்.தேவராஜன் பேசியது: வெந்தயத்தில் உள்ள புரோ சயனடின் என்ற மூலக்கூறு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்கு காப்புரிமை பெற்றுள்ளேன்.

    இதில் உள்ள மூலக்கூறுகள் உடல் சோர்வு, மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றார். அதைத் தொடர்ந்து மூலிகை மருத்துவத் துறையில் சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், துணைவேந்தர் ஜே.எஸ்.என்.மூர்த்தி, மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் சாமுண்டீஸ்வரி, ஆராய்ச்சித்துறை பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன், இங்கிலாந்து சர்வதேச பாரம்பரிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அன்னா கே.ஜாஹர், ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஹண்டா உள்பட அமெரிக்கா, ஜெர்மன், இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai