சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம்: ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 09th March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramadoss

    இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    இலங்கைப் போர் முடிவடைந்த நாளிலிருந்தே இலங்கை மீது போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் பசுமைத்தாயகம் வலியுறுத்தி வருகிறது.

    2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த 12-ஆவது கூட்டத்தில் தொடங்கி, கடந்த ஆண்டு நடைபெற்ற 24-ஆவது கூட்டம் வரையிலான 13 கூட்டங்களிலும், இடையில் நடந்த பல சிறப்புக் கூட்டங்களிலும் இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என பசுமைத்தாயகம் குரல் கொடுத்தது.

    மனித உரிமைப் பேரவையின் 25-ஆவது கூட்டம் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையம், அதை மனித உரிமைப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடந்த 27 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.

    அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தச் சூழலில் இலங்கைப் பிரச்னையின் பின்னணி மற்றும் தீவிரத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் புரிந்து கொள்வதற்கு பசுமைத்தாயகம் அமைப்பின் அறிக்கை உதவும் என்று நம்புகிறேன்.

    எனினும், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளிலாவது நீதி கிடைக்க வேண்டுமென்றால், இலங்கை மீதான இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு உடனடியாக ஆணையிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இதை செய்து முடிக்க வேண்டிய கடமை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது.

    ஈழத் தமிழருக்கு அமெரிக்காவோ அல்லது வேறு ஏதேனும் நாடோ நீதி பெற்றுத்தரும் என்று எதிர்பார்ப்பதைவிட, இந்திய அரசே அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

    எனவே இலங்கை மீது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்பதை தனித் தீர்மானமாகவோ அல்லது ஏற்கனவே அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் திருத்தமோ செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai