சுடச்சுட

    
    statue

    மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படும் நிலையில், நாமக்கல்லில் தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அவ்வாறு மறைக்கப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் உள்ள பதாகைகள், சுவரொட்டிகள் அழிக்கப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றன.

    இதன்தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் சனிக்கிழமை துணியால் கட்டி மறைக்கப்பட்டன. இதில், அண்ணா, எம்ஜிஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மட்டுமன்றி, பெரியார், காமராஜர், நேரு போன்ற தேசத் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள நேரு பூங்காவில் உள்ள காமராஜர், நேரு சிலைகளும், பெரியார் சிலையும், பரமத்திவேலூர் பகுதியில் காமராஜர் சிலையும் துணிகளால் கட்டி மறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைகள் மறைக்கப்படவில்லை.

    அண்மையில் நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலின் போது துணியால் கட்டி மறைக்கப்பட்ட பெரியார், நேரு, காமராஜர் போன்ற தேசத் தலைவர்களின் சிலைகள் பின்னர் மாவட்டத் தேர்தல் அலுவலரின் உத்தரவை அடுத்து, மீண்டும் திறக்கப்பட்டன.

    இதேபோல, நாமக்கல்லிலும் மறைக்கப்பட்டுள்ள தேசத் தலைவர்களின் சிலைகளைத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கூறியது:

    மறைந்த தேசத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை. உயிருடன் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள், சின்னங்களை மட்டுமே மறைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், தவறுதலாக மறைக்கப்பட்டுள்ள தேசத் தலைவர்களின் சிலைகளை திறக்க அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai