சுடச்சுட

    

    தேர்தல் புகார்களுக்கு தொலைபேசி எண் அனைத்து பேரவை தொகுதிகளை கண்காணிக்க குழுக்கள்

    By dn  |   Published on : 09th March 2014 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SMS

    மக்களவைத் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தனி தொலைபேசி எண் (1950) எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பேரவைத் தொகுதிகளையும் கண்காணிக்க குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

    அரசியல் தலைவர்களின் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற 3 நாள்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓரிரு நாள்களுக்குள் பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதியின்றி பணம் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்படுகிறது. அதற்காக நடைபெற்ற சோதனைகளில் நீலகிரி மாவட்டத்தில் ரூ.22 லட்சமும், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கண்காணிப்புக் குழுக்கள்: மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பேரவைத் தொகுதிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் 3 நடமாடும் குழுக்களும், 3 நிலையான குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும்.

    நடமாடும் குழுவில், மாஜிஸ்திரேட் நிலையிலான அதிகாரி, ஒரு போலீஸ் உயரதிகாரி மற்றும் துப்பாக்கி ஏந்திய 3 காவலர்கள் மற்றும் ஒரு விடியோ படம் பிடிப்பவர் இடம்பெறுவர். இந்தக் குழு பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.

    இதேபோன்று, மற்றொரு குழுவில் மாஜிஸ்திரேட் அதிகாரமுள்ள அதிகாரி (வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர்) துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் ஒரு விடியோ படம் பிடிப்பவர் இடம்பெறுவர். இந்தக் குழுவுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது. சோதனையில் மட்டுமே ஈடுபடும். தேவைக்கேற்ப கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிப்படும்.

    நட்சத்திர பேச்சாளர்கள்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்தோரின் பயணச் செலவு சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் வராது. மேலும், நட்சத்திர பேச்சாளர் தனது பிரசாரத்தின்போது வேட்பாளரையோ அல்லது அவரது பெயரையோ உச்சரிக்காமல், சின்னத்துக்காகவும், கட்சிக்காகவும் மட்டும் வாக்கு சேகரித்தால் அவரது பிரசார செலவு வேட்பாளரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

    கட்சிகளின் கணக்குக்கு வரம்பில்லை: வேட்பாளர் வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக செய்யும் பிரசாரத்தின் செலவு அவர் சம்பந்தப்பட்ட கட்சியின் கணக்கில் சேர்க்கப்படும். கட்சிகள் செலவழிப்பதில் எந்த வரம்பும் இல்லை என்றார் பிரவீண்குமார்.

     

    எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

    சென்னை, மார்ச் 8: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் சிறப்பு முகாமின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தோருக்கு உரிய தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் பெயர் குழப்பமோ அல்லது வீதியின் பெயரோ தெளிவாக இல்லாவிட்டால் அது குறித்து செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விவரம் கேட்கப்படும். மேலும், பெயர் சேர்க்கப்பட்டது குறித்த விவரமும் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai