Enable Javscript for better performance
பாஜக - தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை: ஆலந்தூரில் தேமுதிக போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பாஜக - தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை: ஆலந்தூரில் தேமுதிக போட்டி

    By dn  |   Published on : 09th March 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmdk

    தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பாஜக தலைவர்கள் 2-வது நாளாக சனிக்கிழமை பேச்சு நடத்தினர்.

    பாஜக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) பகல் 1.30 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாமக தலைவர்கள் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோருடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு, மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.

    அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேமுதிக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் எல்.கே. சுதீஷ், கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், கே.என். லட்சுமணன், எஸ். மோகன்ராஜுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கான 14 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே. சுதீஷ், வெள்ளிக்கிழமை பாஜக தலைவர்கள் தேமுதிக அலுவலகம் வந்தனர். இன்று பாஜக அலுவலகத்துக்கு நாங்கள் வந்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. தேமுதிக - பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. தமிழகத்தில் இந்தக் கூட்டணிதான் முதல் அணியாக இருக்கும். வரும் மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை இன்னும் இரண்டு நாள்களில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

    ஆலந்தூரில் தேமுதிக போட்டி: மக்களவைத் தேர்தலோடு ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 24-இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அங்கு மீண்டும் போட்டியிட தேமுதிக விரும்புகிறது. இதற்கு பாஜகவும், மற்ற கூட்டணி கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர்: பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது. வேலூரில் அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai