Enable Javscript for better performance
மார்ச் 14-இல் காரைக்குடியில் கம்பன் விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

  

  காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 76-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா மார்ச் 14-ஆம் தேதி முதல் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. முதல் 3 நாள்கள் காரைக்குடியிலும், நான்காம் நாள் நாட்டரசன்கோட்டை கம்பன் அருட் கோயிலிலும் விழா நடைபெறுகிறது.

  காரைக்குடியில் மார்ச் 14-ஆம் தேதி நடைபெறும் முதல் நாள் விழாவுக்கு, முன்னாள் தமிழ்நாடு தகவல் ஆணையர் பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகிக்கிறார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏஆர். லெட்சுமணன் தொடக்க உரையாற்றுகிறார்.

  விழாவில், சிங்கப்பூர் தமிழறிஞர்கள் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லெட்சுமியின் "பெண்ணிய நோக்கில் கம்பர்' என்ற ஆய்வு நூலை தேவகோட்டை டால்ஃபின் ஏ.ஆர். ராமநாதனும், பொறியாளர் அ.கி. வரதராசனின் "அன்னையின் ஆணை' என்ற ஆய்வு நூலை முன்னாள் ரோட்டரி ஆளுநர் எஸ். பெரியணனும் வெளியிடுகின்றனர். ஓவியர் எஸ். சுப்பிரமணியனுக்கு ஓவிய வித்தகக் கலைஞர் விருதினை கம்பன் தமிழாய்வு மைய இயக்குநர் வள்ளி முத்தையா வழங்குகிறார். மேலும், பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் எழுதிய நூலை எம்.எஸ்.ஆர்.எம். மெய்யப்பன் வெளியிடுகிறார்.

  2 ஆம் நாளான சனிக்கிழமை கம்பன் தமிழாய்வு மைய உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவுக்கு, அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் தலைமை வகிக்கிறார். "கம்பன் தமிழ் ஆய்வுக் கோவை' நூலை நல்லி சி.குப்புசாமி செட்டியார் வெளியிட்டுப் பேசுகிறார்.

  மாலையில் நடைபெறும் விழாவில், "முத்தமிழ்க் காதலர்' என்ற பொதுத் தலைப்பில் "கம்பன் - என் காதலன்' என்ற பொருளில் இயற்றமிழில் உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாமி தனி உரையையும், "கண்ணையும் கொடுக்கும் காதலர்' என்ற பொருளில் செல்வி பி. சுசித்ராவின் ஹரிகதை இசை உரையும், "என் அரங்கத்து இன்னமுதன் - எழிற் காதலன்' என்ற பொருளில் நர்த்தகி நடராஜின் நாட்டியமும் நடைபெறுகிறது.

  ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16ஆம் தேதி) மூன்றாம் நாள் உலகத் தமிழ் கருத்தரங்க நிறைவு விழா மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. விழாவில், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்துப் பேசுகிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் கருத்தரங்க நிறைவுரையாற்றுகிறார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் சக்தி அ. திருநாவுக்கரசு சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பேராளர்களுக்கு பரிசு வழங்கிப் பேசுகிறார்.

  மாலையில், பேராசிரியர் தி. ராசகோபாலனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றம் நடைபெறுகிறது. "இன்றைய சூழலில் நாம் பின்பற்றப் பெரிதும் தக்கது எது? என்ற பொதுத் தலைப்பில் "பரதனின் தூய்மையே' என்று த. ராமலிங்கம், தேவகோட்டை அரு. ராமநாதன், ஜெ. செல்வமுத்துமாரி, சொ. சேதுபதி அணியினரும், "சடாயுவின் துணிவுடமையே' என்று கே. சுமதி, பீ. ரகமத் பீபி, பெ. மீனா, மகேஸ்வரி சற்குரு அணியினரும், "கும்பகருணனின் கடமைக் கட்டுப்பாடே' என்று இரா. மாது, இரா. குறிஞ்சிவேந்தன், ப. ராமலெட்சுமி, மு. பழனியப்பன் அணியினரும் தங்களது வாதங்களை முன்வைக்கின்றனர்.

  திங்கள்கிழமை (மார்ச் 17 ஆம் தேதி) நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலில் மாலையில் விழா நடைபெறுகிறது. விழாவில், நாட்டரசன்கோட்டையார் சுப.ராம.லெ.சுப.லெ. சுப்பிரமணியன் என்ற ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகிறார். "தாயினும் இனிய தோழி' என்ற தலைப்பில் ராம. அபிராமி, "தொண்டிற் சிறந்த தூயோன்' என்ற தலைப்பில் சி. ராசா முகம்மது ஆகியோர் பேசுகின்றனர்.

  கம்பன் கழகம் நா. மெய்யப்பன், கண. சுந்தர், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai