Enable Javscript for better performance
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் முடிவு: ஜெயலலிதாவுக்கு ராம்ஜேத்மலானி பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கும் முடிவு: ஜெயலலிதாவுக்கு ராம்ஜேத்மலானி பாராட்டு

    By dn  |   Published on : 09th March 2014 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramjethmalani

    ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும் முடிவை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் உயிரை காக்க உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானிக்கு, ம.தி.மு.க வழக்குரைஞர் பேரவை சார்பில் சென்னையில் சனிக்கிழமை (மார்ச் 8) பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ராம்ஜேத்மலானி பேசியதாவது:

    ""ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நிரபராதிகள்.

    அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தவறானது. நான் நீதிபதியாக இருந்தால் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கமாட்டேன்.

    தூக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் நிறைவேற்றப்படாமல் இருந்தால் தண்டனையை குறைக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

    அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே 23 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர்.

    அவர்கள் மீது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிஷமும் சுருக்கு கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால் அவர்கள் விடுதலை பெறத் தகுதியானவர்கள்.

    கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டால் தண்டனையைக் குறைக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என நீதிபதி சின்னப்ப ரெட்டி கொடுத்த தீர்ப்பை பின்பற்றித்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மிகச் சரியாக தமிழக முதல்வர் புரிந்து செயல்பட்டுள்ளார்.

    அதில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 பேரை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

    இந்த முடிவு பாராட்டத்தக்கது. ஆகையால் அவர் எடுத்த முடிவில் உறுதியுடன் இருந்து, அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவார் என நான் நம்புகிறேன்'' என்று ராம்ஜேத்மலானி கூறினார்.

    நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதில் மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானிக்கு முக்கியப் பங்கு உண்டு. 3 பேரையும் விடுவிப்பதற்காக அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.

    பணம் வாங்காமல் வாதாடியவர்: உச்ச நீதிமன்றத்தில் 10 நிமிஷம் அவர் வாதாடினால் லட்சக் கணக்கில் பணம் அளிப்பதற்குப் பலர் காத்திருக்கினறனர்.

    ஆனால் ராம்ஜேத்மலானி எந்தத் தொகையும் வாங்காமல் 3 பேரின் விடுதலைக்காக வாதாடி உள்ளார். அவருக்கு தமிழ்ச் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.

    ராம்ஜேத்மலானிக்கு தற்போது 92 வயதாகிறது.

    அவர் நூறு ஆண்டுகள் நோயின்றி வாழ வேண்டும். அவரது 100-ஆவது பிறந்தநாள் விழாவை சென்னையில் நாம் கொண்டாட வேண்டும்'' என்றார் வைகோ.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai