சுடச்சுட

    
    thirumalavan_karunanidhi

    திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக திருவள்ளூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் சனிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர்.

    3 தனி தொகுதிகளையும், 2 பொது தொகுதிகளையும் ஒதுக்குமாறு திமுகவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டு வந்தது.

    ஆனால், சிதம்பரம் (தனி) தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு, உடன்பாட்டில் திருமாவளவனும் கையெழுத்திட்டார்.

    இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அறிவாலயத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

    திமுக கூட்டணியில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலக் குழு கூட்டமும் சனிக்கிழமை கூட இருந்தது.

    இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக திருவள்ளூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது.

    உடன்பாட்டுக்குப் பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உணர்வுகளைப் புரிந்து கூடுதல் தொகுதி வழங்கிய கருணாநிதிக்கும், தொகுதி பங்கீட்டுக் குழு தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கும் நன்றி.

    திமுக கூட்டணி வலுவான கூட்டணி. மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விடுதலை சிறுத்தைகளின் அதிருப்தியைப் பயன்படுத்தி, எங்களுக்கு வேண்டாதவர்கள், எங்களை ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காகவே வேண்டாத நடவடிக்கைளில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது.

    இதுபோன்ற செயல்களுக்கு ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இடம் கொடுக்க கூடாது. திமுக கூட்டணியின் வெற்றிக்கு மேலும் தீவிரமாகப் பாடுபடுவோம்.

    இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டும். இடதுசாரி தலைவர்களை திமுக கூட்டணிக்கு வருமாறு வெள்ளிக்கிழமை அழைத்தேன்.

    மதவாத சக்திகள் வலிமை பெற்றுவிடக் கூடாது. தில்லியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. எனவே, இடதுசாரிகள் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்றார் அவர்.

     

    இடதுசாரிகளுக்கு கருணாநிதி மீண்டும் அழைப்பு

     

    இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

    கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதே?

    பதில்: ஏற்கெனவே ஒரு தொகுதி தரப்பட்டது. அது போதவில்லை என்று வலியுறுத்தியதால், அது பற்றி விவாதித்து, மீண்டும் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

    கே: திமுக கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா? அதுபற்றி பேச்சுவார்த்தை நடக்கிறதா?

    ப: இதுவரை இல்லை.

    கே: இடதுசாரிகள் வர முன்வந்தால் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் தருவீர்கள்?

    ப: இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

    கே: தேமுதிக வந்தால் வரவேற்போம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தீர்கள். ஆனால் அவர்கள் வராமல், பாஜக அணிக்குச் சென்றுவிட்டனரே... உங்கள் கருத்து?

    ப: கருத்து எதுவும் இல்லை.

    கே: இடதுசாரிகள் வருவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறதா?

    ப: வந்தால் வரவேற்போம் என்று சொல்லியிருக்கிறேனே தவிர, வருவார்கள் என்று நான் சொல்லவில்லை என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai