Enable Javscript for better performance
117 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    117 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 09th March 2014 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya_cm

    இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையே கொழும்புவில் வருகிற 13-ஆம் தேதி இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

    கடந்த 3 ஆம் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களும், அவர்களின் 8 படகுகளும் இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு நாள்களுக்கு முன்பு தங்களுக்கு கடிதம் எழுதினேன். இதன்பின்பும், கடந்த 5 ஆம் தேதியன்று தமிழகத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜல சந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    ஐந்து படகுகளுடன் பிடித்துச் செல்லப்பட்ட 24 மீனவர்களும், இலங்கையின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர். மேலும், அவர்களின் சொத்துகளான படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு சேதப்படுத்தப்படுகின்றன.

    இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்புவில் வரும் 13-ஆம் தேதியன்று நடைபெறுவதற்கு முன்பாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தங்களுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தேன்.

    இந்த நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, ஒரு சாதகமான மற்றும் சுமுக சூழ்நிலை ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை செய்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    திறனில்லாத மத்திய அரசு: தமிழக மீனவர் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், திறனற்ற நிலையில் மத்தியில் உள்ள இந்திய அரசு உள்ளது.

    இதனால், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்ஜல சந்தியில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள்.

    பொய்யான வழக்குகள் புனையப்பட்டு, தமிழக மீனவர்கள் இலங்கை நாட்டுச் சிறைகளில் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் 39 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தங்களிடம் ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளதை நினைவு கூர்கிறேன்.

    இப்போது கைது செய்யப்பட்டுள்ள 24 மீனவர்களுடன் சேர்த்து மொத்தமாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 177 தமிழக மீனவர்களையும் விடுவிக்க உயர்நிலை அளவில் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    கொழும்புவில் வரும் 13- ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, மீனவர்களும் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக்

    கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai