சுடச்சுட

    

    இனிமேல் கூட்டணியில் எந்த கட்சியும் கிடையாது என்று அறிவாலயத்தின் கதவுகளை இழுத்து மூடிய தி.மு.க. தலைமை, காங்கிரஸையும் தனது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்று முடிவு எடுத்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்துவதுபோல தில்லியில் சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதும் அ.தி.மு.க. அணியிலிருந்து இடதுசாரிகள் வெளியேறியிருப்பதும் தி.மு.க.வின் இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் என்று தெரிகிறது.

    "வலுவான பா.ஜ.க. கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியிலிருந்து குறைந்தது ஐந்து சதவீத வாக்குகள் அந்த அணிக்கு செல்லக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம். இடதுசாரிகளும் இல்லாமல் அ.தி.மு.க. பலவீனப்பட்டு இருக்கும் நிலையில் அந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு தி.மு.க. கூட்டணி வலுவானதாக இல்லை என்று தலைவர் கருதுகிறார். காங்கிரஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்பைவிட காங்கிரஸூடன் "கை'கோர்ப்பதால் ஏற்படும் வாக்கு அதிகரிப்பு கூடுதலாக இருக்கும் என்று தி.மு.க.வில் ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் வலுப்பட்டு இருக்கிறது' என்றார் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கும் தி.மு.க. தலைவர்களில் ஒருவர்.

    எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸூடன் ஒட்டோ உறவோ கூடாது என்று பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிடிவாதமாக இருந்தாலும் இந்த காரணங்களை எடுத்துக் கூறி அவரை சமாதானப்படுத்த தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. காங்கிரஸை தி.மு.க. அணியில் சேர்த்துக் கொள்ளாமல் போனால் பல தொகுதிகளில் தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதையும் அவர்கள் ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    தில்லியிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைந்தாக வேண்டும் என்பதற்கான கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்திடம் தி.மு.க. கூட்டணியை உறுதி செய்யும் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    "தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் சில இடங்களில் வெற்றி பெறுவதுடன் போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் அவலமும் தடுக்கப்படும். பல விஷயங்களில் தி.மு.க. காங்கிரஸூக்கு கடமைப்பட்டிருக்கிறது. என்னதான் ஒட்டோ உறவோ வேண்டாம் என்று கூறினாலும் கடைசியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமைவது உறுதி' என்று தீர்மானமாக தில்லியிலுள்ள அக்பர் ரோடு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2009-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதிகள் அல்லாமல் மதுரை மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளை ஒதுக்குவதற்கு தி.மு.க. தயாராக இருப்பதாக தெரிகிறது.

    இன்னும் இரண்டு நாள்களில் குலாம் நபி ஆசாத் சென்னை வர இருக்கிறார் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான அவரது சந்திப்புக்கு பிறகு கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai