சுடச்சுட

    

    தமிழகத்தில் இடதுசாரிகள் இணைந்து போட்டி: பிரகாஷ் காரத்

    By dn  |   Published on : 10th March 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cpm

    தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழாவில் அவர் பேசியது:

    மத்திய காங்கிரஸ் அரசு ஊழலில் சாதனைப் படைத்த அரசாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு வித்திட்ட மத்திய காங்கிரஸ் அரசு, எந்த அரசும் செய்யாத வகையில், இந்தியாவின் இயற்கை வளங்களை பெரு நிறுவனங்கள் சூறையாட அனுமதித்தது.2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள் நேரடியாக நிகழ்த்தியது தான் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் என்பதால், இந்த ஊழலை தமிழக மக்களுக்கு விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    நிலக்கரி ஊழல், தனியார் நிறுவனத்துக்கு இயற்கை எரிவாயு (கே-ஜி பேசின் ஊழல்) விலையை உயர்த்தி வழங்கியது உள்ளிட்ட ஊழல்களில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.

    இந்த ஊழல்களைக் கண்டித்து, மக்களவையில் முதலில் குரல் கொடுத்தது இடதுசாரிகள்தான். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் நிலக்கரி ஊழலுக்கான தொடக்கமே பாஜக ஆட்சியின் இறுதிக் காலங்களில் ஏற்பட்டது தான். எனவே, ஊழலில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணையானவை தான்.

    ஊழல் நிறைந்த மத்திய காங்கிரஸ் அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும், வகுப்புவாத சக்தியான பாஜகவை வளர விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இடதுசாரிகள் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. புதிய பிரதமர் மட்டும் இந்தப் பிரச்னைக்கு தீர்வாகாது, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றான கொள்கை கொண்ட மாற்று அரசு என்பதே சரியான தீர்வாகும்.

    மாற்றுக் கொள்கை கொண்ட அரசு அமைய, இடதுசாரிகள் பலப்பட வேண்டும். இடதுசாரி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்ற நோகத்தில்தான், மாநிலங்களவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில்லாத அரசியல் கட்சிகளுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்த அடிப்படையிலும், புதுதில்லியில் நடத்தப்பட்ட மதவாத எதிர்ப்புக் கூட்டத்தில் அதிமுக பிரதிநிதி பங்கேற்றார் என்ற அடிப்படையிலும், தமிழகத்தில் இடதுசாரிகள்- அதிமுக கூட்டணி ஏற்பட்டது. தற்போது, இடதுசாரிகளுடன் தொகுதி உடன்பாடு இல்லை என்ற நிலையை அதிமுக தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளது.மாநில அளவிலும், தேசிய அளவிலும் இடதுசாரிகளை ஓரங்கட்டி அல்லது புறக்கணித்து மாற்று அரசை அமைக்க முடியாது.

    தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. இடதுசாரிகள், தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்து இந்தத் தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    தேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக வெற்றிக் கண்ட கட்சிகளுடன் கைக்கோர்த்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மாற்று அரசை அமைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் முன்னெடுக்கும் என்றார் பிரகாஷ் காரத்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai