Enable Javscript for better performance
தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்: ஜெயலலிதா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 10th March 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya_poll

  மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழக மக்களின் நலன்களைப் புறக்கணித்து துரோகம் இழைத்துவிட்டதாக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார். மக்கள் விரோத போக்கை கடைபிடித்துவரும் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

  தமிழகத்தின் உரிமை, தமிழர்களின் நலனைப் பாதுகாக்க மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி அருகேயுள்ள பொருள்காட்சி மைதானத்தில் ஞா யிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

  2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்தேன். அதை நீங்கள் ஏற்று வாக்களித்து என்னை முதல்வராக ஆக்கினீர்கள். தற்போது மத்தியில் உள்ள மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

  தமிழகம் முன்னோடி: இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்ய முடியாத மக்கள் நலத் திட்டங்களை தமிழகம் செய்து வருகிறது. குடும்ப அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி, ஏழைகளுக்கு கறவைமாடு, வெள்ளாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்காலங்களில் அளிக்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  கல்வியில் தமிழகம் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்விக்கான கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. உயர் வகுப்புகளில் இடையில் படிப்பை நிறுத்தும் நிலையைத் தவிர்க்க ரூ.5000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

  நகரத்தில் கிடைக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் கிராமங்களில் கிடைக்கும் வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 33 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரூ.31,762 கோடி அளவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் ஏற்படுத்தப்படும் தொழில் வளர்ச்சியால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

  மத்திய அரசின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்ந்து வந்தாலும், அதிலிருந்து சாமானிய மக்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

  குடும்ப அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி, பொது விநியோகத் திட்டத்தின்மூலம் ரூ.25-க்கு ஒரு லிட்டர் பாமாயில், ரூ.30-க்கு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. அதுபோல் காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. 20 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,32,849 கோடி நிவாரணம் வழங்கி உள்ளது.

  இதுவரை மத்திய அரசோ வேறு மாநில அரசோ இதுபோன்ற வறட்சி நிவாரண நிதியை வழங்கியது இல்லை.

  அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசால் தீர்வு காண முடியாது. மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுவரும் சூழ்நிலையில், மத்திய காங்கிரஸ் அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடந்துகொள்கிறது. இதற்கு திமுக துணை நிற்கிறது.

  மீனவர்கள் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது. இதை மத்திய அரசு செய்ததா என்றால் இல்லை.

  இத்தகைய மத்திய அரசு தேவைதானா? மக்கள் விரோதப்போக்கைக் கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai