சுடச்சுட

    

    இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மீனவளத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்ச் 12 ஆம் தேதி குடும்ப அட்டைகளையும், மீனவர் அடையாள அட்டைகளையும் ராமேசுவரம் வட்டாட்சியரிடம் ஒப்படைப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 3 மாதங்களாக மீன் வளத்துறை அதிகாரிகளிடம் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் மீன் வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வருவதைக் கண்டித்து, பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாம்பன் அந்தோணியார் நகர் பகுதியில் மீனவ சங்கத் தலைவர் எட்வின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் வேலைநிறுத்தம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் படி, வாரத்தில் 3 நாள்கள் மட்டும் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு, 6 நாள்களுக்கு மீன் பிடிக்க அனுமதித்ததை நிறுத்த வேண்டும். நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், மீன் வளம் கிடைக்காத பகுதியான கரையிலிருந்து கடலில் 3 மைல் நாட்டிக்கல் தூரத்துக்குள் மீன் பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை கண்டிக்கிறோம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் மார்ச் 12ஆம் தேதி மீனவர்களின் குடும்ப அட்டைகளையும், மீனவர்களுக்கான அடையாள அட்டைகளையும் ராமேசுவரம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 12 நாட்டுப் படகு மீனவ சங்க தலைவர்களும், பிரதிநிதிகளும், மீனவர்களும் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai