சுடச்சுட

    

    ஆம்பூரில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தகராறு

    By dn  |   Published on : 11th March 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ambur

    ஆம்பூரில் திங்கள்கிழமை நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் பேசியதையடுத்து ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. 3 பேர் காயமடைந்தனர்.

    வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.செங்குட்டுவன் அறிமுகக் கூட்டம், ஆம்பூர் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.

    ஆம்பூர் தொகுதிச் செயலர் அகரம்சேரி ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் தொகுதி வேட்பாளர் பா.செங்குட்டுவன், தேர்தல் பொறுப்பாளர்கள் கே.ஏ.கே.முகில், கே.எம்.கலைச்செல்வி, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணி, ஆம்பூர் நகரச் செயலர் எம்.மதியழகன், ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் சங்கீதா, மாதனூர் ஒன்றியச் செயலர் ஜோதி ராமலிங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கனை பேச அழைத்தனர். அவர் கூறிய ஒரு கருத்து குறித்து அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து பாண்டுரங்கனின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதத்தைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைச்சரின் முன்னிலையிலேயே தள்ளுமுள்ளு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இதில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. மூவர் காயமடைந்தனர். சுமார் அரைமணி நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. தகராறில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியிலும் தகராறு தொடர்ந்தது. இதனால் பெண்களும், தொண்டர்களும் அச்சத்தில் மண்டபத்துக்கு வெளியே ஓடினர்.

    பாண்டுரங்கன் தொடர்ந்து பேசுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று அமர்ந்து கொண்டார். அதன்பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது.

    தகராறு குறித்து தகவல் அறிந்த போலீஸார் மண்டபத்துக்கு வெளியே குவிந்தனர். வேலூரிலிருந்து சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

    தகராறு காரணமாக ஆம்பூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai